சுப்பிரமணிய சிவாவால் வந்தே மாதரம் பிள்ளை என்று அழைக்கப்பட்டவர் பரலி.சு. நெல்லையப்ப பிள்ளை !

சுப்பிரமணிய சிவாவால் வந்தே மாதரம் பிள்ளை என்று அழைக்கப்பட்டவர் பரலி.சு. நெல்லையப்ப பிள்ளை !

Share it if you like it

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிகோட்டையில் சுப்ரமணிய பிள்ளை – முத்துலட்சுமி அம்மாள் இணையருக்கு மகனாக பிறந்தவர் நெல்லையப்பர்.

தலைவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் தொண்டர், பாரதியின் புரவலர். பாரதியால் பாசமாக தம்பி என்றழைக்கப்பட்டவர். விடுதலைப் போராட்ட வீரர்.

வ.உ.சி வீட்டில் தான் பாரதியை முதன்முதலில் சந்திக்கிறார் நெல்லையப்பர். அதன்பின் பாரதியின் கவிதைகளை தொகுத்து வெளியிட்டவர் நெல்லையப்பர் தான். பாரதியின் கண்ணன் பாட்டு ,நாட்டு பாட்டு போன்ற பதிப்புகளை வெளியிட்டவர். 1923 ல் பாரதி பிரசுராலயம் தொடங்கி பாரதியின் மற்ற படைப்புகளையும் வெளிகொண்டு வந்தார். நெல்லையப்பரும் ஒரு சிறந்த கவிஞர் தான் என்பதும் குறிப்பிடதக்கது.

இவரது அண்ணன் பரலி. சு. சுந்தரம்பிள்ளை வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களுடன் இணைந்து சுதேசி இயக்கத்தை பரப்புவதிலும் வலுப்படுத்துவதிலும் முனைப்போடு செயல்பட்டவர். சுதேசி கப்பல் நிறுவனத்தின் பங்குகள் பலவற்றை திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விற்று பல்லாயிரம் ரூபாயை திரட்டி கொடுத்தவர்.

நெல்லையப்பரின் தம்பியான பரலி சு. குழந்தைவேலன். நெல்லையப்பரோடு இணைந்து வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் கப்பல் நிறுவனத்தில் கணக்கராக வேலைப் பார்த்தவர். பின்னாளில் லோகோபகாரி என்னும் இதழை நடத்துவதில் நெல்லையப்பருக்கு உதவி செய்தார்.

கப்பல் நிறுவனம் நடத்தியது, ஊர்வலம் நடத்தியது, வந்தே மாதரம் என முழக்கமிட்டது ஆகிய குற்றங்களுக்காகவும் 1908ஆம் ஆண்டு மார்சு 12ம் தேதி வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையம்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை கண்டித்து துண்டறிக்கை ஒன்றினை நெல்லையப்பர் அச்சிட்டு வெளியிட்டார். அதற்காக நெல்லையப்பரை காவல்துறை கைது செய்தது.

வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்ட போது. கோவை. சி.கே.சுப்ரமணிய முதலியார் உதவியோடு கோவையில் ஆசிரமம் அமைத்து வ.உ.சி இடும் கட்டளைகளை அந்த ஆசிரமத்தில் இருந்தபடியே நிறைவேற்றினார். வ.உ.சி கேரள கண்ணூர் சிறைக்கு மாற்றப்பட்ட பின் சொந்த ஊருக்கு திரும்பினார்.

பாரதியின் புகழை தமிழகமெங்கும் பரப்பிய புகழ் நெல்லையப்பரையே சாரும். எழுத்தாளராக, பத்திரிகையாளராக, பதிப்பாளராக, கவிஞராக விளங்கிய நெல்லையப்பர் சென்னை குரோம்பேட்டைக்கு தன் வாழ்விடத்தை மாற்றி கொண்டார். தான் வாழும் பகுதிக்கு பாரதிபுரம் என பெயர் சூட்டினார். அங்கு எழுப்பபட்ட விநாயகர் கோவிலுக்கு பாரதி விநாயகர் என பெயரிட்டவர்.

வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் புகழும் பாரதியின் புகழும் உள்ளவரை நெல்லையப்பரின் புகழும் நிலைத்து நிற்கும்.

Article by கமலி கணேசன்


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *