மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், மிக முக்கியமானது 4 விருதுகள் தான். அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா ஆகியன.
இதில், ‘பாரத ரத்னா’ விருதுதான் நாட்டிலேயே மிக உயரிய விருதாகும். முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு ஐந்து தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், மூத்தத் தலைவருமான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதேபோல், மறைந்த பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், மறைந்த முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண்சிங், மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேரின் குடும்பத்தினரிடமும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவித்தார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு அறிவிக்கப்பட்ட விருதை, அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவ் பெற்றுக் கொண்டார். இதேபோல், மறைந்த முன்னாள் பிரதமர் சௌத்ரி சரன்சிங்-கிற்கு அறிவிக்கப்பட்ட விருதை, அவரது பேரன் ஜெயந்த் சிங் பெற்றுக்கொண்டார்.
மறைந்த பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு அறிவிக்கப்பட்ட விருதை, அவரது மகன் ராம்நாத் தாக்கூர் பெற்றுக் கொண்டார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட விருதை, அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக்கொண்டார்.
வயது மூப்புக் காரணமாக, நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், மூத்தத் தலைவருமான எல்.கே. அத்வானிக்கு, அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.