எண்ணற்ற தியாகிகளை தேசம் ஆழ்ந்த உணர்வுடன் நினைவுகூர்கிறது !

எண்ணற்ற தியாகிகளை தேசம் ஆழ்ந்த உணர்வுடன் நினைவுகூர்கிறது !

Share it if you like it

1919 மார்ச் மாதம் பிரிட்டீஷ் இந்திய பாதுகாப்பு சட்டமாக ரெளலட் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் இயற்றப்பட்ட குழுவின் தலைவராக சிட்னி ரெளலட் இருந்தார். இச்சட்டம் மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்து உரிமைகளையும் பறித்தது. தேச பாதுகாப்பு எனக் கூறி ரெளலட் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை எந்த விசாரணையும் இன்றி இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். வக்கீல் வைத்து வாதாட முடியாது. ஜாமீன் கிடைக்காது. ஆங்கிலேயர் இயற்றிய சட்டங்களில் மிகவும் மோசமான சட்டமாக இது இருந்தது. இச்சட்டத்தின் கீழ் சத்யபால் மற்றும் சாய்புதின் ஆகிய தலைவர்களை கைது செய்தது ஆங்கிலேய அரசு.

இச்சட்டத்தை எதிர்த்து 1919 ஏப்ரல் 13’ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் இருந்த ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பெரும் திரளான மக்கள் கூடினர். சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மைதானத்தில் மக்கள் கூடி ஆங்கிலேய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது தனது 150 துருப்புகளுடன் வந்து சேர்ந்தார் ஆங்கிலேய அதிகாரி மைக்கேல் ஓ டயர். அந்த மைதானத்துக்கு ஒரே ஒரு நுழைவாயில் தான் இருந்தது. அந்த நுழைவாயிலின் இரும்புக் கதவுகள் அடைக்கப்பட்டன. பின் எந்த முன் அறிவிப்பும் இன்றி டையர் கட்டளையிடவே 150 துருப்புகளும் பொதுமக்களை நோக்கி சுட்டனர். சுமார் 1600 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவிக்கின்றன தகவல்கள். கண் இமைக்கும் நேரத்தில் நடந்தேறிய அந்த கொடூரத்தில் சுமார் 1000 பேர் இறந்ததாக காங்கிரஸ் கூறியது. ஆனால் பிரிட்டீஷ் அதிகாரிகள் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் 379 பேர் மட்டுமே சுடப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், காலம் அதற்கான பதிலடியை 21 ஆண்டுகள் கழித்து கொடுத்தது. 1940 மார்ச் 13-ம் தேதி, லண்டனில் உள்ள கேக்ஸ்டான் ஹாலில் கிழக்கிந்திய கம்பெனியின் நிகழ்வொன்று நடைபெற்றது. அங்கு மைக்கல் ஓ டையர் வந்தார். மேடையேறிய மைக்கேல் ஓ டையரின் உடலை இரண்டு துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. 21 ஆண்டுகள் காத்திருந்து திட்டம் தீட்டி இங்கிலாந்து வரை சென்று மைக்கேல் ஓ டையரை சுட்டவர் உத்தம் சிங். இவரும் ஜாலியான் வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்ட மைதானத்தில் இருந்தவர். உத்தம் சிங்கிற்கு இங்கிலாந்து அரசு மரண தண்டனை வழங்கியது. பிறகு இந்திய விடுதலைக்கு பிறகு இந்திராகாந்தி தலைமையிலான ஆட்சியில் உத்தம் சிங்கின் உடல் இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டு தக்க மரியாதையுடன் மறு அடக்கம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது :-

“1919-ஆம் ஆண்டில் இந்த நாளில் காலனித்துவ ஒடுக்குமுறைக்கு சவால் விடுத்து, நமது நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த ஜாலியன்வாலா பாக்கின் எண்ணற்ற தியாகிகளை நன்றியுள்ள தேசம் ஆழ்ந்த உணர்வுடன் நினைவுகூர்கிறது. அவர்களின் உயரிய தியாகங்கள், பாரதத்துக்காக கூட்டாக எழும் எண்ணத்தை உந்தச் செய்து சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், உத்தம் சிங், கே. காமராஜர் உள்ளிட்டோரை ஈர்த்தன. இவர்களின் தியாகங்களுக்கு தக்க மரியாதையை செலுத்தும் வகையில் #அமிர்தகாலத்தில் அவர்களின் கனவான #வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க நம்மை அர்ப்பணிப்போம்.” – ஆளுநர் ரவி


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *