காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்று கோமதி என்பவரை அவர்களின் குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரப்பரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை.
அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது.
இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/annamalai_k/status/1781951811626393936