டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா 21.04.2024 அன்று சென்னை சேத்துப்பட்டு சக்தி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் திரு. M.சுகுமாரன் தலைமை தாங்கினார். துளசிதாஸ் பவுண்டேஷன் நிறுவனர் V.T. பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். ஆர்எஸ்எஸ் வடதமிழக மாநில இணை செயலாளர் A.ராமகிருஷ்ண பிரசாத் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சி்யில் பட்டியல் சமுதாயத்திற்காக சேவையாற்றி வருபவர்களுக்கு சமுதய நல்லிணக்க விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவுக்கு ராமகிருஷ்ண மிஷன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம்.சுகுமாரன், துளசிதாஸ் பவுண்டேஷன் நிறுவனர் வி.டி.பிரதீப்குமார், வட தமிழகம் ஆர்.எஸ்.எஸ். மாநில இணை செயலாளர் ஏ.ராமகிருஷ்ண பிரசாத், முன்னாள் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி அறக்கட்டளை தலைவர் எம்.கே.ஆர்.மோகன் உள்பட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி, சமுதாயத்தில் நிலவும் வேறுபாடுகளை களைந்து, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சேவை செய்துவரும், ஸ்ரீ ரங்க பராங்குச பரகால ராமானுஜமடம் மடாதிபதி பிள்ளை நரசிம்மப்பிரியா, டாக்டர் அம்பேத்கர் பொதுநல மன்றத்தின் தலைவர் பகத்சிங்,டாக்டர் அம்பேத்கர் டியுஷன் சென்டர் (வியாசர்பாடி) நிறுவனர் சுகன்யா, டாக்டர் அம்பேத்கர் மன்றம் டியூஷன் சென்டர் (பெரம்பூர்) நிறுவனர் வி.சூரியகுமார், சிவபண்டார வழிபாடு நீத்தார் கடன் மற்றும் முத்தி வழிபாடு அருள் சேவகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வட தமிழகம் ஆர்.எஸ்.எஸ். மாநில இணை செயலாளர் ஏ.ராமகிருஷ்ண பிரசாத் பேசியதாவது:
சமுதாயத்தில் எதிர்மறையான விஷயங்கள்தான் தற்போது அதிகம்வெளியே தெரிகிறது. ஆனால், நமதுசமுதாயம் உண்மையில் அவ்வாறு இல்லை. நேர்மறையான விஷயங்களும் அதிகம் சமுதாயத்தில் இருக்கிறது.
அதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. டாக்டர்.ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெறுபவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகளை விதைத்திருக்கிறார். சமுதாயத்தில் இன்றைக்கும் நல்ல விஷயங்கள் செய்யக்கூடியவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
அனைவரையும் மதிக்க வேண்டும். இதைத்தான் அம்பேத்கரும், டாக்டர் ஹெட்கேவாரும் கூறுகிறார்கள். இந்து தர்ம கொள்கையும் அதைதான் சொல்கிறது. அனைவருக்குள்ளும் இறை தன்மை உள்ளது. அதனால், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என யாரும் இல்லை.
”அத்தகைய ஒரு பார்வை இருப்பதினால் தான் ராஜஸ்தானைச் சேர்ந்த உஷா செளகான என்கிற பெண்மணிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு உள்ளது. மலம் அள்ளும் குடும்பத்தைச் சேர்ந்த அவர் பத்மபூஷன் விருது பெறும் அளவிற்கு வளர்ந்தார். அதற்காக அவர் மேற்கண்ட முயற்சிகள் பல. அடித்தளத்தில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்களை நேர்மறையாக அணுகும் பார்வை நமக்குத் தேவை என்றார்.”
நாம் உள்வாங்கும் விஷயங்கள் எதிர்மறையாக இருக்கும்போது அது நமது ஆரோக்கியத்தை பாதிக்கிறது.சமுதாயத்தில் அற்புதமான விஷயங்கள் ஏராளமாக நடக்கின்றன. அதனைஉள்வாங்கினால், நமது ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எனவே,சுயநலம் இல்லாமல், மற்றவர்கள் செய்யக்கூடிய நல்ல விஷயத்தையும் நாம் வரவேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முனைவர் செல்வி ஸ்ரீ பிள்ளை நரசிம்மப்பிரியா அம்மா சுவாமிகள் வைஷ்ணவ சம்பிரதாயத்தின் மடாதிபதி. மாணவர்களுக்கு திவ்ய பிரபந்தம் மற்றும் வைணவ சம்பிரதாயம் முறையை பல ஆண்டுகளாகவும் கற்று கொடுத்து வருகிறார். தனது தந்தையார் கனவுகளை நினைவாக்கும் விதமாக துறவறம் ஏற்று இந்த பணிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஸ்ரீகாந்த் வியாசர்பாடியைச் சேர்ந்தவர். கொரோனா காலத்தில், நெருக்கடியான சூழலிலும் காலமான 120 பேருக்கும் பாரம்பரிய முறையில் இறுதி சடங்குகள் செய்தவர். எவ்வித கெட்டப் பழக்கமும் இல்லாமல் காலமானவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்து வருபவர். குறைந்த பணத்தில் அல்லது பணம் பெறாமல் இந்த சேவைகளை செய்து வருகிறார்.
பகத்சிங் மேட்டுப்பாளையம் அம்பேத்கர் பொதுநல மன்ற தலைவர் இருந்து வருகிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் 40 ஆண்டுகளாக இந்த மன்றத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் பட்டியல் சமுதாய மக்களுக்கு பல விதமான தொண்டுகள் ஆற்றி வருகிறார்.
டாக்டர் V. சூரியகுமார் பெரம்பூர் அம்பேத்கர் மன்றத்தின் நிறுவனர். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டவர். இன்று பல உயர் படிப்புகள் படித்து மற்றவர்களுக்கும் சேவை செய்து கொண்டு இருக்கிறார். அம்பேத்கர் இலவச பாடசாலை நடத்தி வருகிறார். ஒரு பள்ளிக்கூடமும் நடத்தி வருகிறார். சுமார் 350 மாணவர்களை பட்டப்படிப்பு படிக்க வைத்திருக்கிறார்.
திருமதி சுகன்யா சங்கர் வியாசர்பாடியில் அம்பேத்கர் இரவு பாடசாலைகளை நடத்தி வருகிறார். மிகவும் பின்தங்கிய பகுதியில் மகளிர் குழு அமைத்து அவர்களுக்கு தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.
நிகழ்ச்சி முடிவில் அனைவரும் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு இதைப் போல நடந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கியவர் திரு அன்பு செல்வன். இந்தாண்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்து, அதைப் பற்றிய தன்னுடைய கருத்தை அவர் அனுப்பி உள்ளார். அந்த செய்தி:
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கருத்தியல் மற்றும் செயல்பாட்டு வடிவங்களில் நிறைய மாற்றங்கள் தென்பட்டன. இந்நிகழ்வு ஒரு பரஸ்பரமான, எல்லோரும் நன்கு ஐக்கியமான குடும்ப விழாவைப்போல இருந்தது. பொருளறிந்து ஒவ்வொருவரையும் விருதுக்குத் தேர்வு செய்திருந்தார்கள். வெளியில் நடக்கும் பல அம்பேத்கர் விழாக்களில் நான் பங்கேற்றுள்ளேன், விருதுகளும் வாங்கியுள்ளேன். அந்த விழாக்களுடன் ஒப்பிடும்போது வழக்கம் போல பறையர்களை மட்டுமே அழைத்து, பறையர்களாக ஒன்றுகூடி சேரியிலேயே விழா தொடங்கி முடிவடையும். ஆனால் இங்கு பிராமணர் முதல் அனைத்து ஜாதியினரும் வருகை புரிந்து, எவ்வித வேறுபாடும் இன்றி அம்பேத்கரை ஒரு தேசியத் தலைவராகக் கொண்டாடுவதில் இருக்கின்ற சிறப்பையும், மாண்பையும் மரியாதையுடன் உணர முடிந்தது.