ஜாமீன் கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து அபராதத்தை விதித்த நீதிமன்றம் !

ஜாமீன் கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து அபராதத்தை விதித்த நீதிமன்றம் !

Share it if you like it

டெல்லி மதுப்பான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைபட்டுள்ள முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்ததோடு, அதைத் தாக்கல் செய்த சட்ட மாணவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து கடந்த மார்ச் 21 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (ஏப்.22) கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரி பொதுநல வழக்கு ஒன்றினை 4-ஆம் ஆண்டு சட்டம் பயிலும் மாணவர் ஒருவர் தொடர்ந்துள்ளார். மனுதாரர் தனது மனுவில், திகார் சிறையில் பாலியல் வன்கொடுமை, வழிப்பறி, கொலை, குண்டு வெடிப்புக் குற்றவாளிகள் உள்ளனர். அங்கு கேஜ்ரிவால் வைத்திருப்பது அவரது உயிருக்கு ஆபத்து என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், 4-ஆம் ஆண்டு சட்ட மாணவர் ஒருவர் ‘வீ த பீப்பிள் ஆஃப் இந்தியா’ (We the People of India) என்ற பெயரில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். சட்டப்படி உயர் பதவி வகிக்கும் நபருக்கு எதிரான நிலுவையில் உள்ள வழக்குகளில் இதுபோல் இடைக்கால ஜாமீன் வழங்க வாய்ப்பில்லை என்று கூறியது.

அப்போது, கேஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, “இந்த ஜாமீன் மனு ஏற்புடையதல்ல. இது முழுக்க முழுக்க தவறான உந்துதலால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கேஜ்ரிவால் பெயரைக் களங்கப்படுத்தவே தொடரப்பட்டுள்ளது. இது அரசியல் பின்புலம் கொண்ட மனு. மனுதாரரே தனது தந்தை ஒரு மாநில அரசியல் கட்சியின் பிரமுகர் என்றும் கூறியுள்ளார். இதனை நீதிமன்றம் ஏற்கக் கூடாது, ஜாமீன் வேண்டுமென்றால் கேஜ்ரிவாலே மனு தாக்கல் செய்வார்” என்று வாதிட்டார்.

வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரர் தன்னை இந்தியாவின் பிரதிநிதி என்று அடையாளப்படுத்தி அசாதாரண ஜாமீன் கோருவது வெறும் விளம்பரமாகவே தெரிகிறது. இதில் எந்த அடிப்படையும் இல்லை என்று கடிந்து கொண்டனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *