தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் பல்வேறு மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆர் சி கிறிஸ்தவ மிஷனரியால் கடந்த 45 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள லயோலா கான்வென்ட் பெண் குழந்தைகள் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கான பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் சீட்டு கிடைப்பது என்பது பாளையங்கோட்டை சுற்று வட்டார மக்களுக்கு குதிரை கொம்பு தான். குறிப்பிட்ட அளவே எல்கேஜி குழந்தைகளுக்கான அட்மிஷன் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதால், தங்களின் குழந்தைகளுக்கு ஒரு இடம் இந்த பள்ளியில் கிடைத்து விட வேண்டுமே என்ற பரிதவிப்பில் எப்போதுமே குழந்தைகளின் பெற்றோர்கள் இருந்து வருவார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு லயோலா கான்வென்ட் பெண் குழந்தைகள் பள்ளியில் விண்ணப்ப பாரங்கள் கொடுக்கப்படுவதை அறிந்து, நேற்று மாலை முதலே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியின் முன்பாக குவிந்து வருகின்றனர். முதலில் வந்தவர் தனது பெயரை பதிவு செய்து, தற்போது வரை வரக்கூடிய பெற்றோர்களின் பெயர்களை வரிசை எண்கள் இட்டு எழுதி வைத்து வருகின்றனர்.
இந்த முன்னுரிமை நோட்டு இருந்தாலும், பெண் குழந்தைகளின் பெற்றோர்களோ, உறவினர்களோ யாராவது ஒருவர் வரிசையில் நிற்க வேண்டும் என அவர்களுக்குள் விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது உறவினர்கள் யாராவது மாறி மாறி அந்த வரிசையில் நின்று வந்தனர். இந்த கடும் கோடை காலத்தில் பல குழந்தைகளின் பெற்றோர்கள் சட்டை பனியன் அனைத்தையும் கழட்டி விட்டு கோடை காலத்தை சமாளிக்கும் விதமாக பள்ளியின் வாசலில் காத்திருக்கின்றனர்.
சில பெற்றோர்கள் பள்ளியின் வாசலில் இரவு பொழுதை தூங்கிக் கழிக்கும் விதமாக ஆயத்தமாகி வந்துள்ளனர். இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு சில பெற்றோர்கள் தண்ணீர் பாட்டிலுடன், இரவு உணவையும் சாப்பிட வேண்டிய உணவையும் டிபன் பாக்ஸ்களில் எடுத்து வந்து இங்கு வைத்து சாப்பிட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க எந்த விதமான நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்காததால் தனியார் பள்ளிகளில் லட்சம் லட்சமாக கொட்டி தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். பணக்காரர்கள் பணம் கொடுத்து சேர்த்து விடுகின்றனர். ஏழைகள் என்ன செய்வார்கள். திமுக கட்சினரே தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். பின்னர் அவர்கள் எப்படி அரசு பள்ளிகளை பற்றியும் மாணவர்களை பற்றியும் யோசிக்க போகிறார்கள்.