சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் இரயில்வே நிலையம் அருகே அமைந்துள்ள அடர் வனத்தில் நீர் இல்லாமல், செடி, கொடி, மரங்கள் வாடிக் கொண்டிருப்பதாகவும், எங்கெங்கும் சருகுகள் காட்சியளிப்பதோடு, முறையான பராமரிப்பின்மையால் பாம்புகள் தென்படுவதாகவும் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
அரசு நிர்வாகமின்மை அல்லது நிர்வாக சீர்கேட்டிற்கு சிறந்த உதாரணம்.
சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் இரயில்வே நிலையம் அருகே அமைந்துள்ளது இந்த மியாவாக்கி நகர்ப்புற அடர் வனம். கோடிக்கணக்கான ரூபாய் செலவில், மூன்று வருடங்களுக்கு முன் 7050 மரக்கன்றுகளை நட்டு இந்த வனம் அமைக்கப்பட்டது. உண்மையில் அருமையான சூழல், சிறந்த திட்டம். இதன் மத்தியில் காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி மேற் கொள்வது இனிமையான அனுபவம். இந்த வனத்தில் உள்ள இந்த மரங்களுக்கு நீர் பாய்ச்ச நான்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் தண்ணீர் பாய்ச்ச எந்த நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. பல கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த வனத்தில் நீர் இல்லாமல், செடி, கொடி, மரங்கள் வாடிக் கொண்டிருப்பது சோகம். எங்கெங்கும் சருகுகள் காட்சியளிப்பதோடு, முறையான பராமரிப்பின்மையால் பாம்புகள் தென்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு சிறந்த படைப்பை உருவாக்கி, அரசின் நிர்வாக சீர்கேட்டால் அதை சீர்கெடச் செய்வது தான் ‘திராவிட மாடல்’
“நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?” என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
இது குறி்த்து அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா? இவ்வாறு கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.