செஞ்சி அருகே உள்ள மேல்பாப்பாம்பாடி கிராமத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிராம நிர்வாக அலுவலராக ராஜாராம் என்பவர் பணியமர்த்தப்பட்டார். இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் கிராமத்திற்கு செல்லாமல் பொதுமக்களை சான்றிதழ் பெறுவதற்கு செஞ்சிக்கு வர சொல்கிறார். அவரை பணியிடமாற்றம் செய்து வேறு அலுவலரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இன்று செஞ்சி – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக கிராம மக்கள் அறிவித்தனர்.
இத்தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமை தொடர்பு கொண்டு வாரத்துக்கு எத்தனை நாட்கள் கிராமத்திற்கு செல்கிறீர்கள், எத்தனை மணிக்கு சென்று எத்தனை மணிக்கு திரும்புகிறீர்கள் என கேட்டபோது, “நான் கிராமத்திற்கு சென்று தான் வருகிறேன். நீங்கள் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. நான் வேறு எண்ணிலிருந்து அழைக்கிறேன்” என்றவர் திரும்ப அழைக்கவில்லை.
இது தொடர்பாக ஊராட்சிமன்றத் தலைவர் சக்தியிடம் கேட்டபோது, “கிராம நிர்வாக அலுவலர் கிராமத்திற்கு வருவதே இல்லை. தொலைபேசியில் அழைத்தாலும் அழைப்பை ஏற்பதில்லை. மேலும் தேர்தலுக்கு முந்தைய நாள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்யக்கூட வரவில்லை. எல்லாவற்றையும் ஊராட்சி நிர்வாகமே செய்து முடித்தது” என்றார்.
இதற்கிடையே இத்தகவல் அறிந்த சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேல்பாப்பாம்பாடி கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த செஞ்சி வட்டாட்சியர் ஏழுமலையிடம் கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் மற்றும் அவருக்கு துணையாக இருக்கும் கிராம உதவியாளர் விஜயராஜ் ஆகியோரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.