கோயிலின் உள்ளே தனி உண்டியலா ? அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு !

கோயிலின் உள்ளே தனி உண்டியலா ? அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு !

Share it if you like it

திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்றமதுரை கிளையில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் வரதராஜ பெருமாள்கோயில், புஷ்பநாதசுவாமி கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், மகாபல்லேஸ்வரர் கோயில், வழங்கியம்மன் வாஞ்சி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில் ஆகியவற்றுக்குச் சொந்தமாக பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.

இந்த கோயில்களின் சொத்துகளை தனியார் பெயருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளனர். மேலும், கோயில்களில் பராமரிப்புக்குப் போதுமானநிதியில்லை என்று கூறி,கோயிலின் உள்ளே தனியாகஉண்டியல் வைத்தும், ஜிபே வழியாகவும் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன.

எனவே, கரூர் மாவட்ட கோயில்களுக்குச் சொந்தமானசொத்துகளை மீட்டுப் பராமரிக்கவும், கோயில்களில் உண்டியல்வைத்து வசூல் செய்யும் வெளிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்திமுன்னிலையில் விசாரணைக்குவந்தது. அறநிலையத் துறை வழக்கறிஞர் வாதிடும்போது, “கோயில்களில் அன்னதானம் வழங்க தேவையான நிதியை சேகரிக்க உண்டியல் வைக்கப்பட்டது. புகார் வந்ததையடுத்து, உண்டியல்கள் அகற்றப்பட்டன. உண்டியல் வைத்த நபர்களைகண்டறிய சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டபோது, சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து நீதிபதி,” ஒரு கோயிலுக்குள் வந்து உண்டியல் வைத்த நபரைக் கண்டுபிடிக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது திட்டமிட்ட செயல். எனவே, இது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். மேலும், போலீஸாரும் விசாரித்து, உண்டியல் வைத்த நபர்களைக் கண்டுபிடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோயில் சொத்துகள் மீட்பு மற்றும் பராமரிப்பு குறித்து அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பிப். 23-க்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.


Share it if you like it