சனாதன தர்மத்தின் ஆன்மீகத் தார்ப்பரியம் கர்மா மறுபிறவி என்னும் ஆணிவேர்களில் தொடங்குவது. இதில் மானுடப் பிறவி அவரவரின் முன்வினைப் பயன் மற்றும் அவர்களது முன்னோர்களின் முன்வினைப் பயன் அடிப்படையிலேயே ஜனனம் நிகழ்வாக ஐதீகம். இதன் அடிப்படையில் பிறக்கும் மானுடம் அவரவர் கர்ம வினையின் அடிப்படையிலேயே பூவுலகில் உழலும். இதில் தனது கர்ம வினை கழித்து இறை உணர்வோடு பிறவியை அறுத்து மோட்சத்தை பெறுவது ஒரு வகை. மேலும் மேலும் கர்ம வினைகளில் உழன்று மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அல்லல் வருவது ஒரு வகை. அவை இரண்டும் கூட அவரவரின் வினைப் பயனிலேயே அமைவது என்பதே மானுட கர்மா.
இந்த கர்மாவை இறை அருளோடும் ஆசியோடும் கழித்து பாவங்களில் இருந்து விடுபட்டு புண்ணியம் வழியில் பயணித்து பக்தி ஆன்மீகம் மோட்சம் என்னும் நல்வழிப்படுவதற்கு நம் தர்மம் வழங்கிய பல்வேறு வழிமுறைகளில் முதலாவதாக நிற்பது முன்னோர் வழிபாடு. நமது முன்னோர்களின் ஆன்மா அவர்களின் மோட்சம் இறையருள் வேண்டி நல்லெண்ண அடிப்படையில் நாம் செய்யும் யாவும் அவர்களை சென்றடைகிறது என்பது நம் தர்மம். அவ்வகையில் அந்த தர்மத்தை நம் தவறாது முன்னெடுக்கும் போது அந்த முன்னோரின் அகம் குளிர்ந்து அவர்களின் ஆன்மா மகிழும் போது அதன் நமக்கு ஆசியாகி பெரும் வரத்தை இறை அருளை நல்ல செய்யும் .மாறாக நாம் அவர்களின் ஆன்மாவை அலைக்கழிக்கும் போது அது நமக்கு சாபமாக மாறி பித்ரு தோஷத்தை சாபத்தை தேடி தரும். அதனால் தான் முன்னோர் வழிபாடு திதி தர்ப்பணம் சிரார்த்தம் உள்ளிட்டவை எல்லாம் வெகு சிரத்தையாக ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என்ற கட்டளையை நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி வளர்த்தார்கள்.
இந்த முன்னோர் வழிபாட்டில் புரட்டாசி மாதத்தின் மஹாளய பட்சம் என்னும் 14 நாட்களுக்கு விண்ணுலகம் நீங்கி மண்ணுலகம் வந்து தன் சந்ததியரை அருகில் இருந்து ஆசி வழங்கும் பேறு முன்னோர்களுக்கு கிடைக்கும் . அவர்களை அந்த 14 நாட்களும் தொடர்ந்து பூஜித்து அவர்களின் ஆசிபெறும் பேரும் நமக்கு கிடைக்கும். அவ்வகையில் நம் தர்மத்தின் வழிபாட்டில் முதலிடம் கிடைக்கும் முன்னோர் வழிபாட்டில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை முதலிடம் பிடிக்கிறது.
இந்த மஹாளய அமாவாசை தினத்தில் இல்லமும் உள்ளமும் துலங்கச் செய்து ஆச்சார அனுஷ்டானங்களுடன் நம் வீட்டில் நதிக்கரையில் அல்லது புண்ணிய தளங்களை என்று அவரவர் வசதிக்கேற்ப முன்னோர் வழிபாடுகளை திதி தர்ப்பணம் வழியில் தவறாமல் முன்னெடுத்து இயன்ற வரையில் தானங்கள் முழங்கி அதன் மூலம் நம் முன்னோருக்கு பெரும் மோட்சத்தையும் ஆன்ம திருப்தியையும் நாம் பெற்றுத்தர முடியும். இதன் மூலம் அவர்களின் ஆன்மா நம்மை ஆசீர்வதிக்கும். முன்னோர்களின் பூரண ஆசை நமக்கு கிடைக்கும் பட்சத்தில் நமக்கு நமது குல காவல் தெய்வங்கள் கிராம தேவதைகள் எழுந்தருளி நம்மை ஆசீர்வதிக்கும். நமது பூஜைகள் படையல்களை ஏற்று நம்மை உடனிருந்து பாதுகாக்கும். குல காவல் தெய்வங்கள் கிராம தேவதைகள் எழுந்தருளும் இடத்தில் நமது இஷ்ட ஆராதனை தெய்வங்களும் மனை தெய்வங்களும் எழுந்தருளி நம்மை பாதுகாக்கும்.
அவ்வகையில் நமக்கு பூரணமான இறையருள் வாய்க்கப் பெற்று நம்மை பிடித்த எதிர்மறை சக்திகள் தரித்திரம் விலகும். செல்வம் சௌபாக்கியம் சேரும். நாமும் நம் சந்ததிகளும் தடைகள் நீங்கி நலமும் வளமும் வெற்றியும் கீர்த்தியும் பெற முடியும். ஜனன ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்களின் பலனை கூட இந்த முன்னோர் வழிபாடும் அதன் மூலமாக முன்னோர் ஆசியும் குல காவல் தெய்வங்களின் அனுகிரகமும் இஷ்ட தெய்வங்களின் அனுகிரகமும் மாற்றும் வல்லமை கொண்டது. அதனால் தான் முன்னோர் வழிபாடும் அதன் வழியிலான வாழ்வியலும் நம்மை சரியான வழியில் பாதுகாப்பாக வழி நடத்தும் என்பதால் தான் முன்னோர் வழிபாட்டிற்கு நம் வாழ்வியலில் இன்றளவும் முதலிடம் இருக்கிறது. இந்த மகத்துவமான முன்னோர் வழிபாட்டில் மஹாளய அமாவாசை முதலிடம் பிடிக்கிறது. வீடு ஆலயங்கள் நதிக்கரைகள் அல்லது பித்ரு வழிபாட்டிற்கு என்று இருக்கும் விசேஷமான தலங்களில் நாம் செய்யும் பெற்றோர் தர்ப்பணமும் தானங்களும் நமக்கு சர்வ தோஷ நிவாரணியாகும்.
சப்த முக்தி தலங்கள் என்னும் காசி அயோத்தி ஹரித்வார் துவாரகை கயா காஞ்சி ராமேஸ்வரம் என்னும் முக்தி தலங்களில் நாம் செய்யும் தர்ப்பணம் பூஜை அளவற்ற பலன்களை தரவல்லது. திரிவேணி சங்கமம் கன்னியாகுமரி உள்ளிட்ட நதிகள் கடல்கள் சங்கமிக்கும் இடங்களிலும் செய்யும் தர்ப்பணங்கள் அளவற்ற பலன்களை தருபவை. மகாமக தலமான கும்பகோணம் காவிரி கரைத்தலங்கள் புண்ணிய நதி தீரங்களான சப்த நதிகள் கங்கை யமுனை சரஸ்வதி கோதவரி காவேரி தாமிரபரணி கிருஷ்ணா என்னும் புண்ணிய நதிகளின் கரைகளில் நாம் செய்யும் திதி தர்ப்பணம் நமக்கு அளவற்ற பலன்களை தரவல்லது.
பித்ருக்களின் திதி தர்ப்பண பூஜையோடு வெற்றிலை பாக்கு வாழைப்பழம் புஷ்பம் உள்ளிட்ட மங்களப் பொருட்களோடு நம்மால் இயன்ற உணவு தானியங்கள் வஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை தானம் செய்வது வெகு சிறப்பு. மேலும் உணவு குடிநீர் உள்ளிட்டவற்றை பறவைகள் விலங்குகள் ஏழை எளியோருக்கு தானம் வழங்குவது சிறப்பு .பசுக்களுக்கு அகத்திக்கீரை பச்சரிசி வெல்லம் பழங்கள் குடிநீர் உள்ளிட்டவை வழங்குவது பசுவை நீராட்டி தூப தீப ஆராதனையில் மங்கல திலகமிட்டு வணங்கி வர நமக்கு லட்சுமி கடாட்சம் பெருகும். பித்ருக்களின் பூரண ஆசி கிடைக்கும்.
குறிப்பாக ராமேஸ்வரம் மற்றும் அருகில் இருக்கும் திருப்புல்லாணி உள்ளிட்ட இடங்களிலும் திதி தர்ப்பணம் செய்வதற்கான உகந்த ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கும். இதை தவிர அந்தந்த பகுதிகளில் இருக்கும் ஆலயங்கள் உள்ளூரில் இருக்கும் நதிக்கரைகளிலும் தற்சமயம் இந்து அமைப்புகள் உள்ளூர் ஆலய நிர்வாகிகள் மூலமாகவும் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்படுகிறது. அவரவர் வசதிக்கும் சூழலுக்கும் ஏற்ப சிரத்தையோடு முன்னோருக்கு திரி தர்ப்பணம் பூஜைகளை செய்து ஆத்மார்த்தமாக அவர்களின் ஆசி பெறுவோம். முன்னோர்களின் நல்லாசியோடு குல காவல் தெய்வங்களின் அனுகிரகமும் இஷ்ட தெய்வங்களின் அனுகிரகமும் பெற்று வாழ்வில் சகல சௌபாக்கியம் பெறுவோம்.