தமிழகத்தில் கட்டாய மத மாற்றத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏ.பி.வி.பி. அமைப்பினர் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
தஞ்சாவூர் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த அரியலூர் மாணவி லாவண்யா, கடந்த ஜனவரி மாதம் திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்துக்கு பள்ளி நிர்வாகத்தின் மத மாற்ற டார்ச்சர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பா.ஜ.க., ஹிந்து முன்னணி, வி.ஹெச்.பி. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், லாவண்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் போராட்டம் நடத்தின.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் (ஏ.பி.வி.பி.), லாவண்யா மரணத்துக்கு நீதி கேட்டு கடந்த 14-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை கண்டித்தும், லாவண்யா மரணத்துக்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் ஏ.பி.வி.பி. அமைப்பினர் ஸ்டாலின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (பிப்.16-ம் தேதி) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஏ.பி.வி.பி. அமைப்பினர், கைது செய்யப்பட்ட மாணவர் அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், மீண்டும் ஸ்டாலின் வீட்டை முற்றையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும், ஏ.பி.வி.பி. அமைப்பின் தேசியச் செயலாளர் ஆசிஷ் சவுகான், இணைச் செயலாளர் பாலகிருஷ்ணா, மண்டலச் செயலாளர் குமரேஷ் ஆகியோர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், மாணவி லாவண்யா வழக்கில் முக்கிய குற்றவாளியான விடுதி வார்டன் சகாயமேரியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். கட்டாய மத மாற்றத்துக்கு தடை விதிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.