லட்சத்தீவு விவகாரம் குறித்து, கேரளவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி ஒன்று அண்மையில் நடத்திய விவாதத்தில், நடிகை ஆயிஷா சுல்தானா கலந்து கொண்டு தேசத்திற்கு எதிராக தனது எண்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். .
“கொரோனா வைரஸ் லட்சத்தீவு மக்களுக்கு எதிராக, உயிரி ஆயுதமாக (Bio – weapon), மத்திய அரசு பயன்படுத்துகிறது” என்ற கருத்தைத் தொலைக்காட்சி விவாதத்தின் போது ஆயிஷா சுல்தானா கூறியிருந்தார்.
லட்சத்தீவில் வைரஸ் பரவுவது குறித்து, ஆயிஷா சுல்தானா உண்மைக்கு புறம்பான வகையில் பேசியதாக கூறி பா.ஜ.க.,வின் லட்சத்தீவு பிரிவு தலைவர், அப்துல் காதர் கவரட்டி காவல்துறையில் நடிகை மீது புகார் அளித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, போலீசார் தேசத்துரோக வழக்கினை அந்நடிகை மீது பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கில், கவரட்டி போலீசில், ஜுன் 20 அன்று ஆஜராகுமாறு கவரட்டி போலீசார், ஆயிஷா சுல்தானாவிற்கு நோட்டீஸ் அனுப்பினர்.
மூத்த வழக்கறிஞர் விஜயபானு மூலம் ஆயிஷா சுல்தானா, முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அதில், “தனக்கு ஒரு போதும் மத்திய அரசுக்கு எதிராக அதிருப்தியையும், வெறுப்பையும் தூண்டும் எண்ணம் இல்லை” என்று தெரிவித்து இருந்தார்.
ஆயிஷா சுல்தானாவிற்கு, முன்ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நடிகை ஆயிஷா சுல்தானாவின் கருத்துக்கள் மிகவும் அபாயகரமானது என்றும், பிரிவினைவாதத்தை தூண்டுவது போல உள்ளது எனவும், இது போன்ற பிரபல நடிகையின் தவறான கருத்துகளால், பள்ளி செல்லும் மாணவர்கள் மத்தியில், சமூகத்தைப் பற்றி தவறான வழிகாட்டுதல், ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார்.
இதனை அடுத்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அசோக் மேனன் அவர்கள், “எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்ற நிபந்தனையின் அடிப்படையில், ஒரு வாரத்திற்கு நடிகைக்கு முன் ஜாமீனை நீதிபதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.