பயங்கரவாதிகளும் பசு பாதுகாவலர்களும் ஒன்றா? ‘ட்ரோல்’ செய்யப்படும் நடிகை சாய் பல்லவி!

பயங்கரவாதிகளும் பசு பாதுகாவலர்களும் ஒன்றா? ‘ட்ரோல்’ செய்யப்படும் நடிகை சாய் பல்லவி!

Share it if you like it

பயங்கரவாதிகளுடன் பசு பாதுகாவலர்களை ஒப்பிட்டுப் பேசிய நடிகை சாய் பல்லவியை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பஜ்ரங் தள் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்தவர் சாய் பல்லவி. ஆரம்பத்தில் டி.வி.யிலும், சினிமாவில் சிறு சிறு வேடங்களிலும் நடித்திருந்தாலும் பெரிதாக பிரபலமாகவில்லை. மலையாளத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் திரையுலகில் கவனம் ஈர்த்தார். தற்போது, தென்னிந்திய திரைத்துறையில் பிரபலமாக இருக்கிறார். இவர், தெலுங்கு நடிகரான ராணா டகுபதியின் ஜோடியாக நடித்திருக்கும் ‘விரத பர்வம்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. வேணு உடுகுலா இயக்கியிருக்கும் இப்படத்தில் காதல் மற்றும் நக்சலைட் வாழ்க்கையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் புரொமோஷனுக்கான பேட்டி ஒன்றில் சாய் பல்லவி கலந்து கொண்டார். அப்போது, நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இடதுசாரி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவர் என்று கூறப்படுகிறதே? என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சாய் பல்லவி, “அப்படியெல்லாம் இல்லை. நான் நடுநிலையானவள். அண்மையில் காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்தேன். அதில் அங்குள்ள இஸ்லாமியர்களால் காஷ்மீரி பண்டிட்கள் கொல்லப்படுவதுபோல காட்டப்படுகிறது. அதேபோல, கொரோனா காலத்தில் ஒரு மாநிலத்தில் மாடுகளை கொண்டு சென்ற ஒரு இஸ்லாமியரை சில இந்துக்கள் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி அடித்தே கொன்றனர். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது” என்று கூறினார்.

இதையடுத்து, சாய் பல்லவியை கேலியும், கிண்டலும் செய்து நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். மேலும், சாய் பல்லவி இவ்வாறு பேசியது பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் மத்தியிலும், ஹிந்துக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர், ஹைதராபாத் சுல்தான் பஜார் போலீஸில் புகார் அளித்தார். எனினும், இப்புகாரின் மீது போலீஸார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, சாய் பல்லவிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட ஹிந்து அமைப்புகள் முடிவு செய்திருக்கின்றன.


Share it if you like it