இந்தியாவிலேயே தமிழகம்தான் முதன்மையான மாநிலம், ஸ்டாலின்தான் நம்பர் 1 முதல்வர் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால், ஊழல் செய்வதில் தி.மு.க. அரசு நம்பர் 1 ஆக உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.
ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் தங்களது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தனர். அப்போது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவிலேயே முதன்மையான அரசு, நம்பர் 1 முதல்வர் என்று ஸ்டாலின் தன்னைத்தானே கூறிக்கொள்கிறார். தி.மு.க. அரசு எதில் முதன்மையாக இருக்கிறது என்றால், ஊழல் செய்வதில்தான் முதன்மையாக இருக்கிறது. அதேபோல, லஞ்சம் பெறுவதில் முதன்மையாக விளங்குகிறது.
கிராமம் முதல், நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆபரேஷன் 2.0 அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து வருவதாக டி.ஜி.பி. கூறியிருக்கிறார். ஆனால், 102 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். கண்டுபிடித்ததே இவ்வளவு என்றால் இன்னும் கண்டுபிடிக்காதது எவ்வளவு இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். கஞ்சா விற்பனை தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதனால், மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். 2,200 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
2,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவ்வளவு பேரையும் கைது செய்திருக்க வேண்டும் அல்லவா. ஆனால், ஆளுங்கட்சியினர் தலையீடு காரணமாக கஞ்சா விற்பனை நடப்பதால், போலீஸார் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வு சீரழிகிறது. ஆன்லைன் சூதாட்டத்தால், மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீதிமன்ற தீர்ப்புப்படி சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியும் செய்யவில்லை. இதனால், ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுடன் கூட்டு வைத்து செயல்படுகிறார்களோ என்று மக்கள் அச்சமடைகின்றனர். மனமிருந்தால் சட்டசபையில் சட்டம் கொண்டு வந்திருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.