அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ.வை ஒருமையில் பேசிய தி.மு.க. அமைச்சர் துரைமுருகனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் கேள்வி நேரத்தின்போது மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், பாலம் தொடர்பான ஒரு கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் துரைமுருகன், உன் கதையை கேட்டால் சோகமாகத்தான் இருக்கிறது என்று நக்கலாகக் கூறியதோடு, சட்டசபையில் பேசுவதற்கு முன்னர் முழு விவரத்துடன் பேச வேண்டும். பாலம் பிரச்னை குறித்து வெறுமனே பேசக்கூடாது.
அது எந்தப் பாலம், அந்தப் பாலம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் வருகிறதா அல்லது பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறதா அல்லது நெடுஞ்சாலைத்துறையின் ஒரு பிரிவின் கீழ் வருகிறதா என்ற விவரத்துடன் பேச வேண்டும் என்று சொல்லி விட்டு, எல்லா பாலங்களுக்கும் நீர்வளத்துறை பொறுப்பு கிடையாது. இருப்பினும் உன் கோரிக்கை நியாயமானது என்பதால் எல்லா அமைச்சர்களும் கவனித்திருக்கிறோம். யாராவது ஒருவர் நிறைவேற்றிக் கொடுப்போம் என்று கூறினார். பெண் எம்.எல்.ஏ. ஒருவரை அமைச்சர் துரைமுருகன், அவையில் ஒருமையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.