தேர்தல் பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. ஆகவே, இது விடியல் ஆட்சியல்ல, விடியா ஆட்சி என்று அ.தி.முக.வினர் அதிரடியாக பிரசாரம் செய்து போட்டுத்தாக்கி வருகின்றனர்.
தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. தலைவர்கள் பலரும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி விட்டனர். குறிப்பாக, நகைக்கடன் ரத்து, பூரண மதுவிலக்கு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பொங்கல் பரிசுத் தொகை என வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசினார்கள். தவிர, ‘ஸ்டாலின்தான் வர்றாரு, விடியல் தரப்போறாரு’ என்ற ஸ்லோகனை ரெடி செய்து, தமிழகம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்களாகவும் தயார் செய்து ஒட்டிவைத்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, பாடலாகவும் தயார் செய்து ஒலிபரப்பினார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 10 மாதங்களாகி விட்டது. ஆனால், கொடுத்த வாக்குறுதிளை இதுவரை நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில்தான், எதிர்வரும் 19-ம் தேதி நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட அ.தி.மு.க.வினர், இது விடியல் ஆட்சி அல்ல, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா ஆட்சி. இனியும் நம்பி ஏமாற வேண்டாம் தாய்மார்களே என்று பிரசாரம் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள். மேலும், கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர். அதோடு, இதை நோட்டீஸாகவும் அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க.வினரின் இந்த புதிய டெக்னிக் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.