அல்கொய்தா தலைவன் அல் ஜவாஹிரி ‘அவுட்’!

அல்கொய்தா தலைவன் அல் ஜவாஹிரி ‘அவுட்’!

Share it if you like it

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழித் தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நேற்று அறிவித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம், உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இக்கும்பல் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக தலைநகரான நியூயார்க்கில் இயங்கி வந்த இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, அல்கொய்தா இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடனை, ஆப்கானிஸ்தான் முழுவதும் சல்லடை போட்டு தேடியது. ஆனால், அவனுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தனர் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தாலிபான்கள். எனவே, தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டே விரட்டி அடித்தது அமெரிக்கா.

பின்னர், பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை, 2011-ம் ஆண்டு போட்டுத்தள்ளியது அமெரிக்கா மற்றும் நேட்டோ படை. மேலும், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின்போது ஒசாமா பின்லேடனுக்கு தளபதியாக இருந்தது அய்மான் அல் ஜவாஹிரிதான். பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்கொய்தா தலைவராக பொறுப்பேற்ற அல் ஜவாஹிரி, பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அழைப்பு விடுத்தான். ஆகவே, இவனையும் தீர்த்துக்கட்ட அமெரிக்கப் படை தீவிரமாகத் தேடி வந்தது. அவன் பாகிஸ்தானில் இருப்பதாக கூறப்பட்டாலும், இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், அவனது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தது அமெரிக்கா.

ஆகவே, தலைமறைவாக இருந்து வந்த அல் ஜவாஹிரி, அவ்வப்போது தொலைக்காட்சி சேனல்களில் மட்டுமே தலைகாட்டி வந்தான். சமீபத்தில்கூட கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்னை எழுந்தபோது, தனி ஆளாக அல்லாகூ அக்பர் என்று கோஷமிட்ட மாணவி முஸ்கான் கானை பாராட்டி, வீடியோ வெளியிட்டான். இதனிடையே, கடந்தாண்டு தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, அல் ஜவாஹிரி தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் இருந்து காபூல் டவுனில் உள்ள தலிபான் ஆதரவு பாதுகாப்பு இல்லத்திற்கு குடிபெயர்ந்தான். இதை அமெரிக்க உளவுத்துறை மோப்பம் பிடித்து விட்டது. இதையடுத்து, உளவுத்துறை அதிகாரிகள் அல் ஜவாஹிரியின் பாதுகாப்பான வீட்டு மாதிரியை உருவாக்கினார்கள். பின்னர், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி அதிபர் ஜோ பைடனிடம் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து, ஆபரேஷனை ஆரம்பித்தனர். இந்த சூழலில், அல் ஜவாஹிரி திங்கள்கிழமை இரவு வீட்டின் பால்கனிக்கு வந்து உலாத்தி இருக்கிறான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்காவின் சி.ஐ.ஏ., ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் அல் ஜவாஹிரியை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த துல்லியத் தாக்குதலில், அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார். மேலும், இதுகுறித்து பைடன் கூறுகையில், “நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தலைவன் இப்போது இல்லை” என்றும், “எவ்வளவு நேரம் எடுத்தாலும், நீங்கள் எங்கு மறைந்தாலும் பரவாயில்லை. நீங்கள் எங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களைக் கண்டுபிடித்து அழிக்கும்” என்றும் கூறியிருக்கிறார்.


Share it if you like it