ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் பிரபல இஸ்லாமிய மதகுரு உட்பட 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் தலைநகர் காபூல் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான குருத்வாராவில் குண்டு வெடித்தது. இதில், சீக்கியர் ஒருவரும், ஆப்கனைச் சேர்ந்த மற்றொருவரும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி காபூலில் உள்ள மசூதியில் குண்டு வெடித்தது. இதில், 50-க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டனர். இந்த சூழலில்தான், ஹெராத் நகரில் மசூதிக்கு வெளியே நேற்று வெடிவிபத்து நிகழ்ந்திருக்கிறது. இதில்தான், பிரபல மதகுரு உட்பட 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் முக்கிய மதகுருக்களில் ஒருவராக கருதப்படுபவர் முஜிப் ரஹ்மானி அன்சாரி. தாலிபான்களின் ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர். காபூலில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மதகுரு முஜிப் ரஹ்மானி அன்சாரி, நமது இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுபவர்களின் தலையை துண்டிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தார். இந்த சூழலில், வெள்ளிக்கிழமைமான நேற்று தொழுகை நடத்துவதற்காக மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரிலுள்ள காசர்கா மசூதிக்கு மதகுரு முஜிப் ரஹ்மானி அன்சாரி வந்து கொண்டிருந்தார். அப்போது, தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவன், மதகுருவை நோக்கி வந்திருக்கிறான்.
பின்னர், மதகுருவை கட்டியணைத்து கையில் முத்தமிட்டவன், தான் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான். இதில், மதகுரு முஜிப் ரஹ்மானி அன்சாரி மற்றும் அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலினார்கள். மேலும், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கிய மதகுரு உயிரிழந்த சம்பவம் தாலிபான்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “துரதிருஷ்டவசமாக, நாட்டின் பிரபல மதகுருவான மௌளவி முஜிப் ரஹ்மான் அன்சாரி ஹெராத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்” என்றும், “இது ஒரு கொடூரமான, கோழைத்தனமான தாக்குதல்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.