ஆப்கனில் வன்முறை: வெளியேறும் சீக்கியர்கள்!

ஆப்கனில் வன்முறை: வெளியேறும் சீக்கியர்கள்!

Share it if you like it

ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் கைகளுக்குச் சென்றிருக்கும் நிலையில், சீக்கியர்கள், ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதால், அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். இங்கு முஸ்லீம் பெண்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. தாலிபான்கள் ஆட்சியில் இருந்தவரை, அவர்களது அடக்குமுறைக்கு அளவே இல்லாமல் இருந்தது. குறிப்பாக, இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்தனர் தாலிபான்கள். இங்கிருக்கும் அல்கொய்தா பயங்கரவாதிகள்தான் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தியது இந்த அல்கொய்தா பயங்கரவாதிகள்தான். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்து தாலிபான்களை நாட்டை விட்டே விரட்டி அடித்தது. இதன் பிறகு, ஜனநாயக ஆட்சி மலர்ந்து, மக்கள் தாலிபான்களின் கொடுமை இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தனர். ஆனால், 20 ஆண்டுகள் கழிந்த நிலையில், தாலிபான்கள் மீண்டும் தலையெடுத்து, தாக்குதல் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றி விட்டார்கள். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் ஷர்மா, ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, முகமது நபி பற்றி இஸ்லாமிய புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு கருத்தை சுட்டிக்காட்டினார். இது சர்ச்சையான நிலையில், இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக, இந்தியாவை ஒட்டியுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் சீக்கியர்களின் புனிதத் தலமான குருத்துவாரா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு சீக்கியர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற தொடர் வன்முறைகளால் ஆப்கானிஸ்தானில் இருந்து ஹிந்துக்களும், சீக்கியர்களும் மற்றும் சிறுபான்மையினரும் வெளியேறத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அதன்படி, இன்றும் 30 சீக்கியர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி டெல்லியை வந்தடைந்தனர். இவர்கள், தங்களை பாதுகாப்பாக அழைத்து வந்ததற்காக மத்திய பா.ஜ.க. அரசுக்கு நன்றியை தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், சிறுபான்மையினர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். குறிப்பாக, சீக்கியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும், தங்களது உறவினர்கள் பலரும் பெரும் சிக்கலில் சிக்கி இருப்பதாகவும் கூறுபவர்கள், ஆப்கானிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் உட்பட ஹிந்துக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.


Share it if you like it