எப்புடி இருந்தவரு… இப்புடி ஆகிட்டாரே..!

எப்புடி இருந்தவரு… இப்புடி ஆகிட்டாரே..!

Share it if you like it

ஆப்கானிஸ்தானின் ஜனநாயக ஆட்சியில் முன்னணி செய்தியாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் வலம் வந்த நபர், தற்போது தலிபான்கள் ஆட்சியில் சாலையோர வியாபாரியாக மாறி சமோசா உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்று குடும்பத்தைக் காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

1991-ம் ஆண்டு அமெரிக்காவால் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட தாலிபான்கள், 20 வருடங்களுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள். தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அந்நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டது. மக்கள் மீண்டும் அடக்குமுறைக்கு ஆளாகி இருக்கிறார்கள். பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு விட்டன. அதாவது, ஷரியா சட்டப்படிதான் அனைவரும் வாழ வேண்டும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார்கள். பெண்கள் தனியாக வெளியே செல்லக் கூடாது, ஹிஜாப், பர்தா, புர்கா போடாமல் செல்லக் கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்கள். தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண்களுக்கும் இதே கட்டுப்பாடுகள்தான். அதேபோல, தாலிபான் அரசை மீறி செய்திச் சேனல்கள் எந்த செய்தியையும் ஒளிபரப்பக் கூடாது.

தாலிபான்களின் இதுபோன்ற கட்டுப்பாடுகளால் மக்கள் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள். நாட்டில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதனால், ஆப்கானிஸ்தான் மனிதாபிமானமற்ற நெருக்கடியை அனுபவித்து வருவதோடு, பொருளாதார நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. எனவே, சொந்த நாட்டை விட்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தாலிபான்களின் கட்டுப்பாடுகளால் ஆப்கானிஸ்தானில் இருந்த ஏராளமான தொலைக்காட்சிகள் மூடப்பட்டு விட்டன. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களும், பெண்களும் வேலையை இழந்திருக்கிறார்கள்.

அந்த வகையில், முன்னணி செய்தியாளராகவும், செய்தி வாசிப்பாளர்களும் பல்வேறு தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த மூஸா முகம்மாதி என்பவரும் வேலையை இழந்து விட்டார். இவர்தான், வாழ்க்கையை நடத்த வேறு வழியின்றி சாலையோர வியாபாரியாக மாறி இருக்கிறார். பிளாட் பாரங்களில் சமோசா, பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இப்படி இவர் உணவுப் பொருட்கள் விற்பதை, ஹமீத் கர்சாய் அரசில் பணியாற்றிய கபீர் ஹக்மல் என்பவர் எதேச்சையாக பார்த்திருக்கிறார். உடனே, மூஸா முகம்மாதி சாலையோரத்தில் அமர்ந்து சமோசா விற்பதை போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கபீர் ஹக்மால் தனது பதிவில், “தலிபான்களின் ஆட்சிக்கு முன்புவரை ஆப்கானிஸ்தானின் முன்னணி செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக பல்வேறு செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் மூஸா முகம்மாதி. அப்படியான திறமையான ஒருவர்தான் தற்போது தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு சாலைகளில் உணவு விற்று குடும்பத்தை காப்பாற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பார்த்த பிறகுதான், தாலிபான்களின் சர்வாதிகாரத்தால் எத்தனை திறமையான வல்லுநர்கள் வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளி உலகத்துக்குத் தெரியவந்திருக்கிறது. இந்த படத்தை ஆப்கானிஸ்தான் மக்கள் ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதோடு, தாலிபான்களின் கொடூர ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it