உலக பொருளாதாரத்தில் முக்கியப் பங்களிப்பாளராக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் வளர்ச்சியில் அதன் பங்கு 16 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் எனவும் பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.
எண்மம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் எனத் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐஎம்எஃப், இந்தியா தொடர்பாக திங்கள்கிழமை வெளியிட்ட ஆண்டு அறிக்கையில், ‘நிகழாண்டில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா இடம் பெற்றிருப்பதற்கு, கவனமாகத் திட்டமிடப்பட்ட பொருளாதார கொள்கைகள் காரணமாக உள்ளன. கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டெழுந்து, உலக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய சக்தியாக இந்தியா மாறியுள்ளது. கடந்த 2022-2023 நிதியாண்டில் பணவீக்கம் ஏற்றம் இறக்கமுடன் இருந்தாலும் தற்போது குறைந்துள்ளது.
நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமை கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. நிகழாண்டின் தொடக்கத்தில் நிலவிய சர்வதேச நிதிப் பிரச்னைகளின் பாதிப்பு இந்தியாவின் நிதித் துறையின் மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமை வகித்தபோது, பல்துறை சார்ந்த கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்தலில் இந்தியா முக்கிய கவனம் செலுத்தியது, பிற நாடுகளுக்கும் உதாரணமாக இருந்தது.
ஐஎம்எஃப்-க்கான இந்திய பிரதிநிதிக் குழுவைச் சேர்ந்த நட்டா சௌயீரி இது குறித்து கூறுகையில், ‘இந்தியா விரைவான வளர்ச்சியை அடைந்து வருவதாக குறிப்பிட்டார்.