அக்னிபாத் திட்டம் தேசிய நலனுக்காகவும், ராணுவ படைகளை சிறப்பு வாய்ந்ததாக உறுதி செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. ஆகவே, அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டத்தில் தலையிட எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்து, அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து மனுக்களையும் டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.
இந்திய ராணுவத்தை துடிப்புடனும், துணுச்சலுடனும் செயல்பட வைப்பதற்காகவும், படை பலத்தை அதிகரிப்பதற்காகவும், அதிக அளவிலான இளைஞர்களை ராணுவத்தில் அமர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இத்திட்டத்தின் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள் ஆண்டுதோறும் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு 4 ஆண்டுகள் ராணுவத்தில் பதவி வழங்கப்படும்.
இந்த பதவி காலத்தில், அக்னிவீரர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். தவிர, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும். மேலும், தற்போதைய கல்வித் தகுதி, உடற்தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும். மேற்படி 4 ஆண்டுகளும் ஒப்பந்த அடிப்படையில்தான் ராணுவத்தில் சேவையாற்ற வேண்டும். பணி முடிந்த பிறகு, 11 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்புடம். இந்த 45,000 பேரில் 25 சதவிகிதத்தினர் மட்டுமே இந்திய ராணுவத்தில் நிரந்தர பணி வாய்ப்பு வழங்கப்படும். மற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்தாண்டு டிசம்பர் 15-ம் தேதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதன் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. இதில்தான் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இத்திட்டம் தேசிய நலனுக்காகவும், ராணுவ படைகளை சிறப்பு வாய்ந்ததாக உறுதி செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. ஆகவே, அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டத்தில் தலையிட எந்த காரணமும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறது.