அகமதாபாத்தில் 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது சிறப்பு நீதிமன்றம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2008 ஜூலை 26-ம் தேதி சுமார் 1 மணி நேரத்தில் 21 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், 51 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகளுக்கு இந்தியன் முஜாஹிதீன் மற்றும் ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி ஆகிய தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றன. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிமி அமைப்பினர் உட்பட 78 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், ஒருவர் அரசுத் தரப்பு சாட்சியாக மாறவே, 77 பேர் மீது மட்டும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இவ்வழக்கில், பிப்ரவரி 8-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, 28 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று (பிப்.18-ம் தேதி) அறிவிக்கப்பட்டது. இத்தீர்ப்பில்தான், 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது சிறப்பு நீதிமன்றம். மேலும், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.