புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (மார்ச் 21) சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 ஆண்டுகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில், குட்கா முறைகேடு, இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்கெனவே அமலாக்கத் துறையினர், வருமான வரித்துறையினர், தமிழக ஊழல் தடுப்பு துறையின் அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தினர்.
தற்போது, மக்களவைத் தேர்தலில் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் நியமனம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் 3 கார்களில் வந்த அமலாக்கத் துறையினர் இன்று காலையிலிருந்து அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர் .
இந்தத் தகவலை அறிந்து அதிமுகவினர் மற்றும் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அவரது வீட்டின் முன்பு திரண்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் இலுப்பூர் போலீஸார ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நாளை (மார்ச் 22) விசாரணை நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.