திமுகவின் நிழலாக மாறி வரும் அதிமுக

திமுகவின் நிழலாக மாறி வரும் அதிமுக

Share it if you like it

திமுக என்ற கட்சியிலிருந்து பிரிந்து வந்த புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் அதிமுக கட்சியை தோற்றுவித்தார். பிறகு இது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அஇ அதிமுக என்று விரிவடைந்தது. இதன் கிளைகள் அண்டை மாநிலங்களான புதுச்சேரி கர்நாடகாவிலும் வேர் விட்டது. தனிக் கட்சியாக பிறந்த அதிமுகவிற்கு திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை இலக்கு மட்டுமே சித்தாந்தம் கொள்கை கோட்பாடு என்ற முழுமையான அரசியலாக இருந்தது. திமுக எதிர்ப்பு என்பதை அகற்றி விட்டால் அதிமுக என்பது வெற்று அரசியல் களம் என்ற அளவில் தான் அதிமுகவின் பிறப்பும் வளர்ப்பும் சாதனைகளும் இருந்தது.

திமுக எதிர்ப்பில் தனிக்கட்சி கண்ட எம் ஜி ஆர் இதை முழுமையாக உள்வாங்கி இருந்தார். அதன் காரணமாகத்தான் வாழ்நாள் முழுவதிலும் திமுக எதிர்ப்பு என்பதை உயிர்ப்போடு வைத்திருந்தார் . இறை மறுப்பாளர்களாக இருந்த கருணாநிதி மற்றும் அவர்களின் சகாக்களுக்கு எதிரில் தான் ஒரு இந்து ஆன்மீகவாதியாக வெளிப்படையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஸ்ரீரங்கம் முதல் எத்தனையோ கோவில்களை மீட்டெடுத்து இந்த மண்ணின் ஆன்மீகத்தை பாதுகாத்தார் . தன்னை என்றைக்கும் பாரதத்தின் சனாதன பூமியில் பிறந்து வளர்ந்த இந்து ஆன்மீகவாதியாக நிலை நிறுத்திக் கொண்டார்.

தனி தமிழ்நாடு தமிழ் தமிழர் திராவிட நாடு என்ற பிரிவினையின் அரசியல் முகமாக இருந்த திமுகவிடமிருந்து முற்றிலுமாக தனிமைப்பட்டு இருந்தார் எம்ஜிஆர். தமிழகம் பாரதத்தின் ஒரு அங்கம் தேசிய இறையாண்மையும் ஒருமைப்பாடும் கட்டிக் காப்பது மக்கள் பிரதிநிதியாக தனது முதல் கடமை என்ற பொறுப்புணர்வோடு எம்ஜிஆர் வலம் வந்தார். தமிழகத்தின் மேல் தட்டு மக்கள் முதல் கடை கோடி சாமானியன் வரை தன்னை முழுமையாக நம்பி ஆதரிப்பது திமுக என்னும் தீய சக்தியிடம் இருந்து தங்களை எம்ஜிஆர் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே என்று அவர் உணர்ந்திருந்தார். பசிக்கு உணவும் உடுத்த உடையும் வாழ்க்கைக்கான வழியையும் எம்ஜிஆரால் மட்டுமே தங்களுக்கு தர முடியும் என்ற சாமான்ய மக்களின் நம்பிக்கையுமே என்பதை எம்ஜிஆர் உணர்ந்ததனால் தான் அனைத்து தரப்பு மக்களின் அந்த நம்பிக்கையை காக்கும் பொருட்டு எப்போதும் தன்னை அந்த நம்பிக்கைக்கு தகுநிலையாகவே வைத்திருந்தார்.

கருணாநிதி விடுதலைப் புலிகளை ஆதரித்தது போலவே எம்ஜிஆர் ஆதரித்தாரே என்ற கேள்வி எழலாம். கருணாநிதி விடுதலைப் புலிகளை ஆதரித்தது தனி தமிழ் ஈழம் என்ற நல்லெண்ணத்தில் அல்ல. தங்களின் தமிழ் தனி தமிழ்நாடு கோரிக்கைக்கு புலிகளின் உலகளாவிய பொருளாதார பலமும் அரசியல் லாபியும் என்றேனும் ஒரு நாள் கை கொடுக்கும் என்ற சுயநலத்தில் தான் திமுகவின் கருணாநிதியும் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் . இதை கருணாநிதியின் நெருங்கிய சகாவாக இருந்த எம் ஜி ஆர் நன்கு அறிவார். ‌ ஆனால் அவர் விடுதலைப் புலிகளை ஆதரித்ததும் இந்திராவிற்கு அறிமுகம் செய்து வைத்த உதவிகளை பெற்றுக் கொடுத்ததும் முழுமையான மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே. பாவப்பட்ட மக்களுக்கு அவர்களின் சொந்த தேசத்தில் உரிய அரசியல் உரிமைகள் அங்கீகாரங்கள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கமும் மட்டுமே காரணமாக இருந்தது. அவர் புலிகளை ஆதரித்தாலும் தனி தமிழ்நாடு கோரிக்கையை ஏற்கவில்லை. முழுமையான இந்திய தேசியவாதியாகவே இருந்து வந்தார்.

எம்ஜிஆரின் அரசியல் மூலமாக அதிமுகவின் அடுத்த தலைமுறை நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வந்த ஜெயலலிதா அம்மையாரும் எம்ஜிஆரின் வழியிலேயே திமுகவை கடுமையாக எதிர்த்தார். எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரின் ஒருமித்த கருத்தான தீய சக்தி திமுக என்னும் ஒற்றை வாக்கியம் தான் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவர்களின் பின்னே அணிவகுக்க வைத்தது. இயல்பிலேயே ஆன்மீக ஈடுபாடும் தேசிய உணர்வும் மிக்கவர் ஜெயலலிதா . அவர் எம்ஜிஆர் நம்பிக்கை ஆதரவு பெற்று அரசியலில் அதுவும் அதிமுகவை ஒரு கட்டம் வரையில் வளர்வதற்கு இந்த தேசிய தெய்வீக நிலைப்பாடும் ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் எம்ஜிஆரின் மன ஓட்டத்தை உணர்ந்து தன் இயல்பிலும் மாறாது தனது அரசியல் எதிர்காலத்தையும் பாழாக்காது ஜெயலலிதா சரியான பாதையில் தெளிவான இலக்கில் பயணித்தார்.

தனது ஆட்சிக் காலத்தில் எம்ஜிஆரால் புனர் நிர்மாணம் பெற்ற ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நித்திய அன்னதானத்தை தொடங்கி வைத்து தன்னை எம்ஜிஆர் வழி வந்த அதிமுகவின் அடுத்த தலைமை என்பதை பறைசாற்றி விட்டார். தன்னை நாடி வந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி பல்லவ தேசத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக அருள்பாலிக்கும் பராசரேசரின் வழக்கருத்தீஸ்வரர் ஆலயத்தின் புனர் நிர்மாணத்திற்கு முழு பங்களிப்பை வழங்கினார்.வைணவ குடும்பத்தில் பிறந்தவர் ஆயினும் ஒரு சைவ ஆலயத்தை மீட்டெடுத்த பெருமைக்கு உரியவராக தன்னை ஒரு தேர்ந்த ஆன்மீகவாதியாக நிலை நிறுத்திக் கொண்டார்.

இந்து அறநிலையத் துறையின் மூலம் ஆலயங்கள் பாதுகாக்கும் உள்ளிட்ட விஷயங்களை தன்னாலான விஷயங்களை அவர் செய்தே வந்தார். மாறாக அவரையும் மீறி நடக்கும் விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்து அவரின் பார்வைக்கு போகும்போதும் அவர் நடவடிக்கை எடுக்க தயங்கியதே இல்லை. இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் உருவாகவும் வளரவும் எம்ஜிஆர் முழுமையான ஆதரவை வழங்கி இருந்தார் .இது போன்ற அமைப்புக்கள் பாஜக உள்ளிட்ட கட்சிகள் வளர்ந்தால் தனது அரசியலுக்கு பெரிய இழப்பை தரும் என்ற போதிலும் ஜெயலலிதா எதிர்த்து அரசியல் செய்திருப்பாரே ஒழிய அராஜகம் வன்முறை அக்கிரமங்களில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. தன் கட்சிக்காரர்கள் ஈடுபடவும் அவர் அனுமதித்ததில்லை.

பாஜக ஆதரவு எதிர்ப்பு என்ற அரசியல் வேறு. காங்கிரஸ் ஆதரவு எதிர்ப்பு என்ற அரசியல் வேறு . ஆனால் தேசம் தேசியம் என்ற தேசிய உணர்வில் சமரசம் கிடையாது. பாரதத்தின் பழமையான சனாதன தர்மத்தின் வழியில் பிறந்து வளர்ந்த ஆன்மீகவாதிகளாக தாங்கள் வாழும் பண்பாடு கலாச்சார வாழ்வியலில் சமரசம் கிடையாது என்ற நிலைதான் ஜெயலலிதாவின் அரசியல் கோட்பாடு. அந்த வகையில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசியவாதிகளாக தனிப்பட்ட வாழ்வில் வெளிப்படையான நேர்மையான ஆன்மீகவாதிகளாக எம்ஜிஆர் ஜெயலலிதா என்னும் இரண்டு இலைகளும் செழிப்போடு இருந்து தான் அதிமுக என்னும் ஆலமரத்தை பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்தது.

நாங்கள் ஜெயலலிதா அம்மாவின் வாரிசுகள் என்று சொல்பவர்கள் இன்றுதான் வாழும் நாளெல்லாம் எந்த பயங்கரவாதம் தேசப்பிரிவினைவாதம் வன்முறை அராஜகங்களை ஜெயலலிதா எதிர்த்து வந்தாரோ? அவர்களை எல்லாம் வாக்கு வாங்கி அரசியலுக்காக இன்று எடப்பாடி அரவணைக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். புதுடில்லியில் நடந்த நாடாளுமன்ற தாக்குதல் அதன் தொடர்ச்சியாக நடந்த விவகாரங்களை மனதில் வைத்து வாக்கு வங்கி அரசியலை தூக்கி எறிந்து வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் தான் கட்சி சார்ந்த வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்த இரும்பு பெண்மணி ஜெயலலிதா .அவரின் வழிவந்த வாரிசுகள் என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடியும் அவரின் ஆதரவாளர்களும் பெரும் உயிர் சேதத்தையும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வரும் அளவிற்கு வாக்கு வங்கி அரசியலுக்கு பலியாகிப் போனது அதிமுகவின் துரதிருஷ்டமே.


Share it if you like it