திருமாவளவன் தி.மு.க.வின் உறுப்பினரல்ல, கொத்தடிமை என்று புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை பார்த்து நீங்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார் ஒரு நிருபர். இதனால் ஆத்திரமடைந்த திருமாவளவன், நான் தி.மு.க.காரனா என்று கொந்தளித்தார். இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும், நிருபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், திருமாவளவன் தி.மு.க.காரர் அல்ல, கொத்தடிமை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி.
இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்று ஏர்போர்ட் மூர்த்தியை நேர்காணல் கண்டது. அப்போது, திருமாவளவன் 2001 சட்டமன்றத் தேர்தலின்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டபோது பழைய உறுப்பினர் அட்டையை எடுத்துக்காட்டி நான் தி.மு.க.காரன்தான் என்று கூறிய பழைய பேப்பர் கட்டிங் ஒன்றை எடுத்துக் காட்டிய ஏர்போர்ட் மூர்த்தி, திருமாவளவன் தி.மு.க.வின் கொத்தடிமை என்று காரசாரமாக பேட்டி அளித்திருக்கிறார். மேலும், தாழ்த்தப்பட்டவர்களை மூன்றாம் தரமாக நடத்தலாம் என்பது தி.மு.க. ஆட்சியாளர்களின் எண்ணம் என்றும் கூறியிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருமாவளவனை பற்றி ஏர்போர்ட் மூர்த்தி இன்னும் என்னவெல்லாம் சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.