கூட்டணி ஓகேங்க : ஆனா சீட் நாட் ஓகேங்க !

கூட்டணி ஓகேங்க : ஆனா சீட் நாட் ஓகேங்க !

Share it if you like it

திமுகவுடன்தான் கூட்டணி என்பதை உறுதியாக தெரிவித்துவிட்டாலும், தாங்கள் கேட்கும் இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்துடன், திமுகவின் முடிவுக்காக காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகள் காத்திருக்கின்றன. இன்றோ அல்லது ஒரு சில தினங்களிலோ கூட்டணி உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறையை விட அதிக தொகுதிகளில் போட்டியிட திமுக விரும்புவதாக கூறப்படுகிறது.

இதை காரணம் காட்டியே, மற்ற கட்சிகள் கூடுதல் இடம் கேட்கும்போது மறுப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் 12 தொகுதிகளை கேட்ட நிலையில், தற்போது கடந்த முறை அளித்த அதே எண்ணிக்கையாவது வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது.இதனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாமல் உள்ளது. விசிக, 2 கட்ட பேச்சுவார்த்தையிலும் கடந்த முறை தரப்பட்ட 2 தனித் தொகுதிகளுடன் இந்த முறை 1 பொதுத்தொகுதியும் வேண்டும் என்பதுடன் தங்கள் சின்னத்திலேயே போட்டி என்பதில் உறுதியாக உள்ளது.

அதேபோல் மதிமுகவும், கடந்த முறை தரப்பட்டதுபோல் ஒரு மாநிலங்களவை, ஒரு மக்களவை மற்றும் சொந்த சின்னம் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் கூட்டணியில் புதிய கட்சியாக மக்கள் நீதி மய்யத்தையும் திமுக சேர்க்க முனைப்பு காட்டுகிறது. அக்கட்சி சார்பில் 3 இடங்கள் கேட்கப்பட்டுள்ள நிலையில், ஒரு இடத்தையாவது கண்டிப்பாக கொடுக்க வேண்டிய நிர்பந்தம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த இடத்தையும் காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதியில் இருந்து தர திமுக முடிவெடுத்துள்ளது. இதனால், இழுபறி நீடித்து வருகிறது. அதே நேரம், திமுக இறங்கி வந்து தாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், திமுகவின் அழைப்புக்காக காத்திருக்கின்றன.

இதுகுறித்து, திமுக நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ‘‘எங்கள் கட்சியும் இத்தனை தொகுதிகளில் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்ற முடிவில் உள்ளது. இதுதவிர, மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சிலவற்றில் எங்கள் கட்சியினர் போட்டியிட விரும்புகின்றனர்.

கூட்டணி கட்சிகளும் தொகுதி மாற்றத்தை எதிர்பார்ப்பதால், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் தொகுதிகள் வழங்கப்பட்டுவிட்டாலும், எந்த தொகுதி என்பது தெரிவிக்கப்படவில்லை. காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகளுடன் இன்று அல்லது ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீட்டை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.


Share it if you like it