அம்புஜம்மாள்
(சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் எஃகு பெண்)
ஸ்ரீ அம்புஜம்,
உங்கள் கடிதத்தைப் படித்ததில், நான் மகிழ்ச்சி அடைந்தேன். நீண்ட காலத்திற்குப் பிறகு, உங்கள் கடிதத்தைப் பார்த்தது, ஒரு தந்தை தனது மகளைப் பார்த்த போது அனுபவித்த மகிழ்ச்சியை எனக்கு அளித்தது…. ஏன் உங்கள் மனம் கவலைப் படுகிறது. எனக்கு எழுதுங்கள்” பாபுவின் ஆசீர்வாதம்…
காந்திஜியிடமிருந்து, இந்தக் கடிதத்தைப் பெற்ற போது, அம்புஜம்மாள் வயது 36.
அம்புஜம்மாள், 1898 இல், ஒரு பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தார். ஒரு திறமையான மொழியியலாளர். எஸ். தேசாச்சாரி என்ற வழக்கறிஞரை, திருமணம் செய்து கொண்டார். அம்புஜம்மாள் ஆசிரியராக தகுதி பெற்று, ‘சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளி’யில், பகுதி நேரமாக கற்பித்தார். 1929 முதல் 1936 வரை, சாரதா மகளிர் சங்கத்தின் குழு உறுப்பினராக இருந்தார். சகோதரி சுப்பலட்சுமியுடன் மிக நெருக்கமாக வேலை செய்தார். 1929 ஆம் ஆண்டில், சென்னை மகளிர் சுதேசி லீக்கின் பொருளாளரானார். இந்த லீக், காங்கிரசின் அரசியல் சாராத பிரிவாக இருந்தது, காந்திஜியின் சமூக மற்றும் பொருளாதார திட்டங்களை செயல் படுத்தியது.
1920களில், மெட்ராஸுக்கு வந்த போது, காந்திஜியை சந்தித்ததில் இருந்தே, அம்புஜம்மள் அவரைப் பின்பற்றினார். சேவா கிராமுக்கு வருகை தந்த போது, ஹரிஜன் நல நிதிக்காக, தனது வைரங்கள் மற்றும் பட்டுகளை கொடுத்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார், சுதேசியின் வலுவான ஆதரவாளராக இருந்ததால், வெளிநாட்டுப் பொருட்களையும் ஆடைகளையும் புறக்கணித்தார், மேலும் காதியைத் தழுவினார். 1932 இல், ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப் பட்டார். தனது வாழ்க்கையை, இந்தியா சுதந்திர போராட்டத்திற்காக அர்ப்பணித்தார், மேலும் பல பெண்களையும், அவ்வாறு செய்ய ஊக்கப் படுத்தினார். பெண்கள் நலன் அவரது நிகழ்ச்சி நிரலில் முதலிடத்தில் இருந்தது. 1948 ஆம் ஆண்டு, சென்னை தேனாம்பேட்டையில் சீனிவாச காந்தி நிலையம் என்ற இடத்தில், தேவைப்பட்டோருக்கு இலவச பால், மருந்துகள் மற்றும் கஞ்சி ஆகியவை வழங்கப் பட்டன. அம்புஜம்மள் எளிமைக்குப் பெயர் பெற்றவர். அக்கம்மா என்று அன்புடன் அழைக்கப் பட்டவர், கதர் உடையணிந்து, கழுத்தில் மணிகளின் இழையைத் தவிர வேறெதுவும் அணிந்ததில்லை.
தமிழக முதலமைச்சரான எம்.பக்தவத்சலத்தின் மகளும், சமூக ஆர்வலருமான சரோஜினி வரதப்பனுக்கு, அம்புஜம்மள் வழிகாட்டியாக இருந்தார். சுதந்திரத்திற்கு முன்பு சென்னை, இராணிப்பேட்டை ஹை ரோடில், ஒரு சிறிய அறையில், இருவரும் இலவச இந்தி வகுப்புகளை, நடத்தினர். 1934 முதல் 1938 வரை இந்தி பிரச்சார சபாவின் நிர்வாகக் குழுவில், அம்புஜமாள் இருந்தார். இந்திக்காக நிறைய பிரச்சார வேலைகளை செய்தார். இந்தி பிரச்சார சபாவுடனான அவரது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 1934 இல், பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார்.
வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தை பிரபலபடுத்த, அவருடன் தமிழ்நாட்டில், 1956 இல் சுற்றுப் பயணம் செய்தார், அம்புஜம்மாள். கிராம தன்னிறைவு மாதிரியை நம்பினார். அதனை பரிந்துரைத்த படி, 1930ல் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு, கைது செய்யப் பட்டார். 1957 முதல் 1962 வரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், 1957 முதல் 1964 வரை மாநில சமூக நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.
1939 முதல் 1942 வரை செயலாளராகவும், 1939 முதல் 1947 வரை பொருளாளர் பதவியையும் வகித்து, மகளிர் இந்திய சங்கத்தின் (டபிள்யூ.ஐ.ஏ), குறிப்பிடத்தக்க உறுப்பினராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில், அவர் பேசிய பிரச்சினைகள்: குழந்தை திருமணம் ஒழிப்பு, பலதார மணம் ஒழிப்பு,தேவதாசி அமைப்பு ஒழிப்பு , பெண்களின் உரிமைகளையும் அவர்களின் சொத்து உரிமைகளையும் பாதுகாப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வருதல்.
மகளிர் இந்திய சங்கத்தின் சார்பில், சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரைக்கப் பட்டார். 1947 ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மகளிர் மாநாட்டின் போது, வரவேற்புக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டார்.
இந்தி மற்றும் தமிழில் குறிப்பிடத்தக்க அறிஞராக இருந்தார், அம்புஜம்மாள். காந்தியைப் பற்றி மூன்று புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளார். 1964 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, அவருக்கு வழங்கப் பட்டது.
– ஆனந்த்