ஆம்பூர் அருகே பாம்பு கடித்து உயிரிழந்த சிறுவனின் உடலை 3 கி.மீ. தூரம் டோலியில் தூக்கிச் சென்று அடக்கம் செய்த அவலம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருவம் ஊராட்சிக்கு உட்பட்டது குப்புராஜபாளையும். இங்குள்ள இருளர் காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவனின் மகன் அர்ஜூன். அப்பகுதியிலுள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த இவனை, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாம்பு கடித்து விட்டது. இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால், இச்சிறுவனை குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல இயலவில்லை. இதனால், சிறுவன் அர்ஜூன் பரிதாபமாக உயிரிழந்து விட்டான். சிறுவனின் உயிரிழப்பு அவனது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதில், இன்னொரு சோகம் என்னவென்றால், இப்பகுதியில் இடுகாடும் இல்லை என்பதுதான். அதேசமயம், இடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதியும் இல்லை. இதனால், அமரர் ஊர்தி, ஆம்புலன்ஸ் உட்பட எந்த வாகனமும் செல்ல முடியாது. ஆகவே, சிறுவனின் உடலை அவனது பெற்றோரும், ஊர்மக்களும் டோலி கட்டி, சுமார் 3 கி.மீ. தூரத்திலுள்ள இடுகாட்டிற்குச் தூக்கிச் சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அன்றையதினம் அப்பகுதியில் மழையும் பெய்து கொண்டிருந்தது. எனவே, கொட்டும் மழையில் நனைந்தபடியே சிறுவனின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆகவே, இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இருளர் காலனி மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா?