அதானியுடன் தொடர்புபடுத்தி பாரத பிரதமர் மோடியை விமர்சனம் செய்த ஜார்ஜ் சோரஸ் ஒரு பொருளாதார போர்க்குற்றவாளி என்றும், மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ஜெய்சங்கர் ஆகியோர் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஓப்பன் சொசைட்டி என்ற அறக்கட்டளையை நடத்தி வருபவர் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ். இவர், முனிச் நகரில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசியபோது, “மோடியும் அதானியும் மிக நெருக்கமானவர்கள். இருவரது வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. தற்போது அதானி குழுமம் சீட்டுக் கட்டு சரிவதுபோல் சரிந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் மோடி அமைதியாக இருக்கிறார். அதானி குழுமத்தின் சரிவு மோடியின் ஆட்சியை வலுவிழக்கச் செய்யும். இது இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இவரது பேச்சு இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “சோரஸ் தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்துக்காக இந்தியாவின் ஜனநாயகத்தை தகர்க்க விரும்புகிறார். அவரது விருப்பத்துக்கேற்ப இந்திய அரசு வளைந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறார். இந்தியாவில் தனக்குச் சாதகமான நபர்களை ஆட்சியில் அமர வைக்கும் நோக்கில் செயல்படுகிறார். இங்கிலாந்து வங்கியை சரிவுக்கு தள்ளியதால், அவர் பொருளாதார போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட முயற்சி செய்யும் அந்நிய சக்திகளை இந்தியர்கள் ஒன்றிணைந்து தோற்கடிப்பார்கள். ஜார்ஜ் சோரஸ் போன்று இந்தியாவை சீர்குலைக்க முயற்சி செய்பவர்களை பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எதிர்கொள்வோம்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “நியூயார்க் நகரில் அமர்ந்து கொண்டு உலகம் இன்னமும், தங்களின் கருத்துகள் படியே இயங்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இவரை போன்றவர்கள், அவர்களுக்கு விருப்பமானவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அதனை நல்லது என்பார்கள். மாறாக, தேர்தல் எதிர்மறையான முடிவை தந்திருந்தால், அதனை ஜனநாயக குறைபாடு என்பார்கள். தேர்தல் முடிந்ததும், அதன் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாடும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாங்கள் இல்லை. நாங்கள் லட்சக்கணக்கான முஸ்லீம்களின் குடியுரிமையை பறிக்கப்போவதாக ஜார்ஜ் சோரஸ் ஏற்கெனவே குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. நீங்கள் இதுபோன்ற அச்சுறுத்தல்களை செய்யும்போது, லட்சக்கணக்கான மக்கள் குடியுரிமையை இழக்கலாம். ஏனென்றால், அவர்களில் சிலர் உங்களை நம்புகிறார்கள். நீங்கள் அந்த வகையான மனநோயை உண்டு பண்ணுகிறீக்கள்” என்று கடுமையாக சாடி இருக்கிறார்.