இந்தியாவின் அதானி நிறுவனம் குறித்த அறிக்கை வெளியிட்டு, அந்நிறுவனத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய ஹிண்டன்பர்க் நிறுவனம், சொந்த நாட்டில் மிகப்பெரிய வங்கி திவாலானது கூடத் தெரியாமல் இருந்திருக்கிறது என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், சமீபத்தில் நம் நாட்டின் அதானி குழும நிறுவனங்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது. அதேசமமயம், அதானி குடும்பத்தின் சரிவு ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்தது. இதன் மூலம் ஹிண்டன்பர்க் சுய லாபம் அடைந்தது என்று குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகவும், தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கு பெரிய அளவில் கடன் வழங்கும் நிறுவனமாகவும் இருந்த சிலிக்கன் வேலி வங்கி, திடீரென வீழ்ச்சியடைந்து கடந்த வாரம் திவாலானது. இதையடுத்து, அதானி நிறுவனத்தின் மோசடி குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம், தனது சொந்த நாட்டில் உள்ள வங்கி அமைப்பில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாமல் இருந்திருக்கிறதே? என்று நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.