அமெரிக்காவில் 8 மாதக் குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது மாணவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபகாலமாகவே, அமெரிக்காவில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பெண்களை, அமெரிக்காவைச் சேர்ந்த பெண், தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு கூறி, தாக்குதல் நடத்தினார். அதேபோல, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இவ்வாறு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த நிலையில், கடந்த சில இரு தினங்களுக்கு முன்புதான், அமெரிக்காவில் 8 மாதக் குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிரிச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் இன்டியானா மாநிலம் போலிஸ் நகரில் வசித்து வந்தவர் வருண் மணிஷ் சேடா. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது மாணவரான இவர், பர்டூ பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் படிப்பு படித்து வந்தார். இப்பல்கலைக்கழகத்தின் மேற்கு முனையில் உள்ள மேக்கட்சான் அரங்கிலுள்ள அறையில் தங்கி இருந்தார். இவருடன் கொரியாவைச் சேர்ந்த மாணவர் மின் ஜிம்மி ஷா என்ற மாணவரும் தங்கி இருந்தார். இந்த சூழலில், நேற்று முன்தினம் காலையில் காவல் துறைக்கு போன் செய்த மின் ஜிம்மி ஷா, தான் வருண் மணீஷ் சேடாவை கொலை செய்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், விரைந்து சென்று பார்த்தபோது வருண் மணீஷ் சேடா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், கொரிய மாணவர் மின் ஜிம்மி ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் எதற்காக வருணைக் கொலை செய்தார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.