துபாயில் ஹிந்து கோயில் திறப்பு: அனைத்து மதத்தினருக்கும் அனுமதி!

துபாயில் ஹிந்து கோயில் திறப்பு: அனைத்து மதத்தினருக்கும் அனுமதி!

Share it if you like it

துபாயில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஹிந்து கோயில் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், இக்கோயிலில் அனைத்து மாதத்தினருக்கும் அனுமதி உண்டு என்று கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பழமையான ஹிந்து கோயிலாக கருதப்படுவது சிந்தி குரு தர்பார் கோயிலாகும். இக்கோயிலை விரிவாக்கம் கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துறைமுக நகரமான ஜெபல் அலியில் இக்கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு திறக்கப்பட்டது. துபாய் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் மற்றும் அமீரகத்திற்கான இந்திய தூதர் சஞ்சய் சுதீர் ஆகியோர் இணைந்து கோயிலின் தொடக்க விழாவில் பங்கேற்றனர். இந்திய மற்றும் அரபு கட்டடக் கலை வடிவமைப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இக்கோயில் சகிப்புத்தன்மை, அமைதி, நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது.

இக்கோயிலில், சிவன், கிருஷ்ணர், விநாயகர் மற்றும் மகாலட்சுமி உட்பட 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. 70,000 சதுர அடி பரப்பளவில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் அனைத்து மதத்தினருக்கும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்திருக்கிறது. சுமார் 1,000 முதல் 1,200 பக்தர்கள் ஒரே நேரத்தில் வழிபாடு செய்யலாம். காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோயில் நிர்வாகம் கியூ.ஆர். குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தி இருக்கிறது. இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் 7 தேவாலயங்கள், குருநானக் தர்பார் சீக்கிய குருத்வாரா மற்றும் ஹிந்து கோயில் ஒன்றும் அமைந்திருக்கிறது. இதனால், இப்பகுதி ‘வழிபாட்டு கிராமம்’ என்று அழைக்கப்படுகிறது.


Share it if you like it