உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சல்மான் ருஷ்டி. முஸ்லீம் எழுத்தாளரான இவர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தார். இவர், கடந்த 1988-ம் ஆண்டு “சாத்தானின் வேதங்கள்” என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். இப்புத்தகம் உலகளவில் மிகவும் பிரபலமானது. இதன் மூலம் உலகளவில் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறினார். அதேசமயம், இவரது புத்தகம் உலக அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக இப்புத்தகம் இருந்ததுதான். எனவே, ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் பலவும் சல்மான் ருஷ்டிக்கு ‘பட்வா’ எனப்படும் மரண தண்டனையை விதித்தன. இதையடுத்து, இந்தியாவை விட்டு வெளியேறிய சல்மான் ருஸ்டி, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். 2016-ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமையும் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதாவது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் சல்மான் ருஷ்டி பங்கேற்றிருந்தார். அப்போது, திடீரென ஒரு மர்ம நபர் மேடை ஏறி வந்து சல்மான் ருஷ்டியின் கழுத்து மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த அவரை, உடனடியாக மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், அங்கிருந்த போலீஸார் துரிதமாக செயல்பட்டு, சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய அந்த மர்ம நபரை சுற்று வளைத்து பிடித்தனர். அந்த நபரின் பெயர் ஹாதி மாடார் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, சல்மான் ருஷ்டி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், கத்திக்குத்தில் அவரது கல்லீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இத்தாக்குதலால் அவரது பார்வை பறிபோகும் அபாயம் இருப்பதாகவும், சல்மான் ருஷ்டியின் உதவியாளர் ஆண்ட்ரூ வெய்லி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். மேலும், சல்மான் ருஷ்டி வென்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இத்தாக்குதலுக்கு சல்மான் ருஷ்டியின் எழுத்துக்களும், கருத்துக்களுமே காரணம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் முன்னாள் அதிபர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.