சீன உளவு பலூன்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

சீன உளவு பலூன்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!

Share it if you like it

சீனா ராட்சத பலூனை அனுப்பி உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அப்பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தி இருக்கிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. ஆகவே, இதற்கு தீர்வு காணும் வகையில், அமெரிக்கா, சீனா தரப்பில் உயர்மட்ட அதிகாரிகள் கூடி, பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள், தைவான் பிரச்னை, கொரோனா வைரஸ் பெருந்தொற்று போன்ற பல விஷயங்களை விவாதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இக்கூட்டம் பிப்ரவரி 5 மற்றும் 6-ம் தேதி சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த சூழலில், சீனாவின் ராட்சத பலூன் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் வடமேற்கு பகுதியான மொன்டானாவில் பறந்திருக்கிறது. இங்குதான் அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. மேலும், அமெரிக்காவின் விமானப்படைத் தளவாடமும் அமைந்திருக்கிறது.

இந்த சூழலில், சீனாவின் ராட்சத மர்ம பலூன் பறந்து சென்றது, அமெரிக்காவை சீண்டியது போல் ஆகிவிட்டது. எனவே, அமெரிக்கா, சீனா உயர் மட்ட அதிகாரிகள் கூட்டத்தை அமெரிக்கா ரத்து செய்து விட்டது. மேலும், சாதாரண வணிக வகை விமானங்கள் அதிகபட்சம் 65,000 அடி உயரம் வரை பறக்கும். ஆனால், சீனாவின் இந்த பலூன் 80,000 அடி முதல் 1,20,000 அடி வரை பறந்திருக்கிறது. அமெரிக்கா – ரஷ்யா பனிப்போர் நடந்தபோது இதுபோன்று பல பலூன்கள் பறந்திருக்கின்றன. எனவே, அந்த பலூனை சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டார். அதேசமயம், அந்த பலூனை சுட்டு வீழ்த்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்று அமெரிக்கா அச்சமடைந்தது.

காரணம், அந்த ராட்சத பலூனின் அடிப்பகுதியில், அதனை இயக்கத் தேவையான ஆற்றலை சூரிய ஒளி மூலம் உருவாக்கிக் கொள்ளும் சோலார் பேனல்கள், கேமராக்கள், ரேடார்கள், சென்சார்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்குத் தேவையான பொருட்கள் என பல சாதனங்கள் இருந்தன. இந்த பாகங்களின் அளவு பெரிதாக இருப்பதாகவும், பலூனை சுட்டு வீழ்த்தும்போது அந்த பாகங்கள் அமெரிக்க நிலப்பரப்பில் விழுந்து உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் தயக்கம் காட்டினர். எனவே, கடல் பறப்பில் பறக்கும்போது அப்பலூனை சுட்டு வீழ்த்த ராணுவம் முடிவு செய்தது. இதற்காக, அமெரிக்க போர் விமானங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், லத்தீன் அமெரிக்க பகுதியில் சீனாவின் மற்றொரு ராட்சத பலூன் தென்பட்டிருக்கிறது. இதனிடையே, முதல் பலூன் இன்று காலை அட்லாண்டிக் பெருங்கடலில் 6 கடல் மைல்களுக்கு அப்பால் நிலை கொண்டிருந்தது. இதையடுத்து, அந்த பலூனை அமெரிக்க ராணுவ போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியது. சீனாவின் அத்துமீறலுக்கான பதிலடி இது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிடு ஆஸ்டின் கூறியிருக்கிறார். “இந்த பலூனை சுட்டு வீழ்த்தியதின் மூலம், அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு குழு எப்போதும் அமெரிக்க மக்களின் பாதுகாப்பு முதலிடம் கொடுப்பதை நிரூபிக்கிறது. அதேநேரத்தில் சீனாவின் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல்களுக்கு தக்க பதிலடியையும் அளிக்கிறது” என்று லாயிட் ஆஸ்டின் கூறியிருக்கிறார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனின் உதிரி பாகங்களை கைப்பற்றி, அதன் கூறுகளை ஆய்வு செய்ய அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. அதேசமயம், அமெரிக்கா தேவையில்லாமல் அதீத எதிர்வினை ஆற்றியிருப்பதாக சீனா கண்டனம் தெரிவித்திருக்கிறது. அது ஒரு சிவில் விமானமாகும். இது வானிலைக்காக பறக்க விடப்படும் பலூன். வானிலையை கணிப்பது மட்டுமே இதன் வேலை. இது அட்லாண்டிக் கடலில் சர்வதேச எல்லையில்தான் பறந்து கொண்டு இருந்தது. அதை சுட்டு வீழ்த்துவது சர்வதேச விதிகளை மீறிய செயல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமைகளை சீனா பாதுகாக்கும் என்று தெரிவித்திருக்கிறது.


Share it if you like it