இந்தியர்களை நான் வெறுக்கிறேன். இந்தியாவுக்கே திரும்பிச் செல்லுங்கள் என்று குடிபோதையில் ரகளை செய்த அமெரிக்க பெண்மணியை போலீஸார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்திலுள்ள டல்லாஸ் நகரில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திராணி பானர்ஜி. இவர் தனது நண்பர் பிதிஷா ருத்ரா உட்பட 3 பெண்களுடன் இரவு உணவு அருந்துவதற்காக நேற்று ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார்கள். உணவு சாப்பிட்டுவிட்டு தங்களது காரை எடுப்பதற்காக, வாகன நிறுத்துமிடத்திற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது, அங்கு வந்த அமெரிக்கப் பெண்மணி ஒருவர், இந்திராணி பானர்ஜி மற்றும் அவரது நண்பர்களைப் பார்த்து, “இந்தியர்களை நான் வெறுக்கிறேன். இந்தியர்கள் உல்லாச வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். ஆனால், இந்தியாவில் அப்படி வாழ முடியவில்லை. அதனால்தான் அனைவரும் அமெரிக்காவுக்கு வருகிறார்கள். நான் ஒரு மெக்சிகன், அமெரிக்கன். நான் இங்குதான் பிறந்தேன். நீ இங்கு பிறந்தாயா? நீங்கள் இந்தியாவுக்கே திரும்பிச் செல்லுங்கள்” என்று இடையிடையே தகாத வார்த்தைகளை சொல்லி திட்டினார்.
இதை இந்திராணி பானர்ஜியுடன் வந்த பெண் ஒருவர் வீடியோ எடுத்திருக்கிறார். உடனே, அந்த அமெரிக்க பெண், அவர்களை தாக்கியதோடு, வீடியோ எடுப்பதை நிறுத்தாவிட்டால் சுட்டுவிடுவேன் என்று சொல்லி, தனது கைப்பைக்குள் கையை விட்டிருக்கிறார். கைபைக்குள் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மிரண்டுபோன இந்திய பெண்கள், அவசர போலீஸ் எண்ணுக்கு போன் செய்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீஸார், அந்த அமெரிக்கப் பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், அப்பெண் மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட எஸ்மரால்டா அப்டன் எ்பது தெரியவந்தது. பின்னர், அந்த வீடியோவை இந்திய பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு, அமெரிக்க பெண்ணின் இனவெறியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.