அமித்ஷா மின்தடை… அதிகாரிகள் மீதான தாக்குதல்… அமைச்சர் செந்தில்பாலாஜி கைது பின்னணி என்ன..?!

அமித்ஷா மின்தடை… அதிகாரிகள் மீதான தாக்குதல்… அமைச்சர் செந்தில்பாலாஜி கைது பின்னணி என்ன..?!

Share it if you like it

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது பின்னணியில் இரு வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதன்படி, வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் அல்லது அமித்ஷா வரும்போது ஏற்படுத்தப்பட்ட மின்தடை ஆகியவை காரணமாகக் கூறப்படுகின்றன.

அமைச்சர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, கடந்த மாதம் 26-ம் தேதி கரூரில் செந்தில்பாலாஜியின் தம்பி வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனையின்போது செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டுக்கு சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளிடம், செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களும், தி.மு.க.வினரும் ஐ.டி. கார்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அதிகாரிகளையும் தாக்கி, அவர்கள் சென்ற காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதில், காயமடைந்த அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். மத்திய அரசு அதிகாரிகளை தாக்கிய இந்த விவகாரம், மத்திய பா.ஜ.க. அரசை ரொம்பவே கோவப்படுத்தியது. இந்த சூழலில், கடந்த 12-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் நடந்த மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவர், விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது.

எனினும், இதை பொருட்படுத்தாத அமித்ஷா, கிண்டி நட்சத்திர ஹோட்டலை நோக்கிச் சென்றார். வழியில் ஏராளமான தொண்டர்கள் அமித்ஷாவுக்கு வரவேற்புக் கொடுக்கக் காத்திருந்தனர். உடனே, காரில் இருந்து இறங்கிய அமித்ஷா, தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடியே சிறிது தூரம் சாலையில் நடந்து சென்று, அவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அப்போதும், மின்தடை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் மின்தடை ஏற்பட்ட இந்த விவகாரமும், மத்திய அரசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த இரு விவகாரத்திலும் சம்பந்தப்பட்டிருப்பது அமைச்சர் செந்தில்பாலாஜிதான். மேலும், சமீபகாலமாகவே தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் ஸ்டேட்மென்ட் விடுத்து வந்தார் செந்தில்பாலாஜி. ஆகவே, மேற்கூரிய காரணங்களால்தான் வருமான வரித்துறை ரெய்டுக்கும், அமலாக்கத்துறை ரெய்டுக்கும் ஆளாகி இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி என்கிறார்கள்.


Share it if you like it