நினைவு கொள்ள வேண்டிய தியாகங்கள்! மிகவும் தீரமிக்கவர்களாக கருதப்படுபவர்கள் சீக்கியர்கள் !
அப்படிப் பட்ட சீக்கியர்களின் புனித கோவிலான அம்ரித்சர் பொற்கோவிலையே, மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சேர்ந்தவர்களே, உயிரை கொடுத்து போராடி காத்தனர் என்று தெரியுமா?
மார்ச் – 6, 1947 – இந்திய சுதந்திரம் கிடைக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அம்ரித்சர் நகரில் ‘ஹர்மந்திர் சாஹிப்’ என்று அழைக்கப் படும் பொற்கோவிலை நோக்கி, முஸ்லீம் லீக்கின் பெரும் கலவர கூட்டம் முன்னேறுகிறது. அந்த பகுதியில், ‘நேஷனல் கார்டு’கள் (National Guard) என்கிற அமைப்பின் கீழ் இருக்கும் சீருடையணிந்த இஸ்லாமியர்களின் தலைமையில், பெரும் கூட்டம் அந்த தங்க கோவிலை கைப்பற்றி, முற்றிலும் அழிக்க திட்டமிட்டு நகர்கிறது.
இங்கு, ஒரு பின்னணி செய்தியை நினைவில் கொள்ள வேண்டும்.
1947ன் தொடக்கத்திலேயே, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, உறுதி செய்யப் பட்டு விட்டது. எந்தெந்த பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமோ, அந்த பகுதி பாகிஸ்தானுக்கும், எந்தெந்த பகுதியில் அவர்கள் பெரும்பான்மை இல்லையோ, அந்த பகுதிகள் இந்தியாவுடன் இருக்கும், என்று கருத்துக்கள் உலவியது. ஆனால், அவை தீர்மானமாக எந்தெந்த பகுதிகள் என்பது தெளிவு படுத்தப் பட வில்லை. குழப்பம் அதிகமாகி, பல புரளிகளின் அடிப்படையில், வடநாட்டின் பல இடங்களில் கலவரம் தாண்டவ மாடியது. முஸ்லீம்கள், தாங்கள் இருக்கும் இடங்களிலிருந்த இந்துக்களை விரட்டி, அந்த இடங்களை இஸ்லாமியர் பெரும்பான்மை கொண்ட இடமாக காட்ட, பெரும் வன்முறையை கையாண்டனர்.
அப்படி ஒரு வன்முறையை தான், இன்றைய பாகிஸ்தானின் எல்லையோரம் இருக்கும் நகரமான அம்ரித்சர் நகரில், அன்று முஸ்லீம்கள் ஈடுபட்டனர். அவர்கள் நோக்கம், அம்ரித்சர் நகரை பாகிஸ்தானுடன் இணைப்பது. அந்த நோக்கத்தோடு, கலவரத்தில் ஈடுபட்டனர். மாற்று மதத்தினரை வெளியேற்ற, எந்த எல்லைக்கும் செல்ல முற்பட்டனர். அதன் ஒரு பகுதி தான், அந்த தங்க கோவிலை கைப்பற்றி தரை மட்டமாக்குவது.
அந்த கலவர கூட்டம், ‘ஷெராவாலா கேட்’ (Sherawala Gate) எனும் இடத்திலிருந்து கிளம்பி, ‘ப்வாரா சவுக்’ (Favvara Chowk) நோக்கி, இஸ்லாமிய ஜிகாதி கோஷங்களை எழுப்பியபடி நகரந்தது.
அதுவரை, அவர்கள் கடந்து வந்த நகர்புற பகுதிகளில், அவர்களை எதிர்த்து நிற்க அல்லது அவர்களின் கொள்ளைகளை தடுக்க, எவரும் தைரியமாக முன்வராத காரணத்தால் அந்த வெறியர்கள், வெற்றி நிச்சயம் என்கிற மமதை தலைக்கேறி வெறியாட்டதுடன் முன்னேறினார்கள்.
“எப்படி இந்தியாவை வெற்றி கண்டோமோ, அதே போல பாகிஸ்தான் அடைந்தே தீருவோம்” (Leke rahenge Pakistan Jaise Jeeta tha Hindustan) என்பது போன்ற கோஷங்கள் வெறியேற்றின.
தங்களின் முன்னேற்றத்தை, அந்த நகரின் இந்துக்கள் தடை செய்ய மாட்டார்கள், எதிர்க்க மாட்டார்கள் என்றே இந்த கூட்டம் நம்பியது. காரணம், தாங்கள் சீக்கிய கோவிலை தாக்க போகும் போது, இந்துக்கள் ஏன் அதைப் பற்றி அதிகம் கவலை கொள்ள போகிறார்கள்? அவர்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருப்பார்கள் என்றும் கணக்கிட்டனர்.
இந்த முறை கலவரத்தில், அவர்களின் குறி, தங்க கோவிலும் அதன் வழியில் இருக்கும் புகழ் பெற்ற ‘கிருஷ்ணா டெக்ஸ்டைல் மார்க்கெட்’ (மொத்த வணிகம் செய்யும் பெரும் வணிக வளாகங்கள் கொண்டவை).
இப்படி கிளம்பிய இந்த குண்டர் கூட்டத்தை, மேலும் வெறியேற்றும் விதத்தில், சில மோசமான சரித்திர நிகழ்வுகளையும் நினைவு படுத்தி கோஷமிட்டனர். அதாவது, 1757 ல் ஆப்கானிய கொடூர அரசன், ‘அகமது ஷா அபதாலி’ (அகமது ஷா துராணி) எப்படி இந்த சீக்கிய குருத்வாராவை தாக்கி தரைமட்ட மாக்கினாரோ, அது போல தரை மட்டமாக்குவோம் என்று கோஷமிட்டனர்.
ஆனால் அன்று (மார்ச் 6, 1947), கலவரக்காரர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.
கலவரக்காரர்கள், ‘பவ்வாரா சவுகத்தை’ (Favvara Chowk) அடைந்த அடுத்த நிமிடம், நாலாபுறம் இருந்தும் அவர்கள் பயங்கரமாக தாக்கப் பட்டனர். தடி, வாள், ஈட்டி, கோடாரி, கையெறி குண்டு என பல வகை ஆயுதங்களை கொண்டு தாக்கப்பட்டனர். அதிர்ச்சியில் உறைந்து போன இந்த முஸ்லீம் கலவரக்காரக்கள், இத்தகைய எதிர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. தங்களை தாக்குவது, நிக்கர்வாலாக்கள் (Knicker walas), அதாவது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என உணர்ந்தவுடன், பயத்தில் தெறித்து ஓடினர்.
அன்று மிகப்பெரிய அழிவு, சரித்திர இழிவு தடுக்கப்பட்டது.
ஆர். எஸ். எஸ். காரர்களின், அன்றைய வீர எதிர் வினை தான், அன்று அந்த ‘கிருஷ்ணா மார்க்கெட்டை’யும், ‘ஹார்மந்திர் சாஹிப்’ எனப்படும், ‘தங்க கோவிலையும்’ காப்பாற்றியது. அந்த வீர போராட்டத்தில், முக்கியமான பங்கு வகித்தவர்களில், திரு. சாய்தாஸ் என்பவரின் தலைமை மிகவும் முக்கியமானது. இவரை, ‘பீஜிலி பயில்வான்’ (Bijli Behlwan) என்றும் அழைப்பார்கள்.
அன்று கலவர காரர்களை விரட்டி அடித்தது மட்டுமல்லாமல், ‘தங்க கோவிலுக்கு’, மேலும் எந்த வித ஊரும் விளையக்கூடாது என்று, அடுத்து ஒரு வருடத்திற்கு, தினமும் 24 மணிநேரமும், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்த 75 பேர், காவல் காத்த வீர வரலாற்றை நாம் அறிதல் வேண்டும்.
இக்கட்டான கலவர காலத்தில், தங்க கோவில் மீதான தாக்குதலை முறியடித்தது மட்டுமல்லாது, அதை காக்க பெரும் துணிவுடன், மிகச் சிறந்த கட்டுப்பாட்டுடன், இந்த ஆர்.எஸ்.எஸ். சேர்ந்தவர்கள், அர்பணிப்புடன் பணியாற்றியதை, அன்றைய ராணுவ பிரிகேடியர் (QM) – பின்னாளில் மேஜர் ஜெனரல் ஆன, திரு. ஜி. எஸ். சிங் பெரிதும் பாராட்டினார். தங்கள் உயிரை பணையம் வைத்து, கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களை காத்து, அவர்களை அம்ரித்சர், லூதியானா, மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாமில் சேர்ப்பது வரை, அனைத்து உதவிகளையும் ஆர்.எஸ்.எஸ். இளைஞர்கள், சிறிதும் அஞ்சாமல் ஒரு தவம் போல செய்ததை, தாம் நேரில் கண்டதாய் பாராட்டுகிறார்.
அதே வருடம், டிசம்பர் 1947ல் அம்ரித்சர் நகரில் ஆர்.எஸ்.எஸ். ஆல் நடத்தப் பட்ட “சம்மேளன்” எனும் நிகழ்விற்கு, அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டார். அந்த நிகழ்ச்சி, ராணுவம் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சி இல்லாவிட்டாலும், திரு. சிங் தன் முழு ராணுவ உடையில் வந்து சிறப்பித்தார். இது பெரிய விஷயம். காரணம், வழக்கமாக ராணுவம் சம்பந்தப்படாத நிகழ்வுக்கு, முழு ராணுவ உடையில் ராணுவ அதிகாரிகள் செல்வதில்லை! சிவிலியன் ஆடையிலேயே, செல்வார்கள். அப்படியிருக்க அன்று, திரு. ஜி. எஸ். சிங் தன் முழு ராணுவ உடையில் வந்தது, அந்த நிகழ்வுக்கு, அவர் அளித்த கவுரமாகவே பார்க்கப் பட்டது.
அன்று அவர் பேசும் போது, “ மிகவும் இக்கட்டான காலக்கட்டத்தில், மிகவும் கடுமையான சூழலில், ஆர்.எஸ்.எஸ். இளைஞர்களின் தன்னலமற்ற தொண்டு, எந்த ராணுவ வீரனின் செயலுக்கும், சற்றும் குறையாத செயல்பாடாகும்” என்று கூறி பாராட்டினார்.
ஆம்.. அன்று நம் இந்து சகோதரர்கள், சீக்கிய சகோதரர்களின் சிக்கலான நேரத்தில், தோள் கொடுத்து காத்தனர்.
ஆர்.எஸ்.எஸ். சரித்திரத்தில்…
இது போன்ற வீர தீர அர்பணிப்பு செயல்பாடுகள் அநேகம்…
சரித்திரம் முக்கியம்!
மீண்டும் மீண்டும் நினைவு கொள்வோம்…
நன்றி:
“The Fiery Saga of RSS” by Manikchandra Vajpayee.
“டிவிட்டரில்” – பரத்வாஜ் (@BharadwajSpeaks) – சரித்திர ஆய்வாளர்.
– ரவி சுந்தரம்