அந்தமான் நிகோபார் தீவு அருகே கடலுக்கு அடியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவு மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. இந்த சூழலில், அந்தமான் நிக்கோபார் தீவிலுள்ள கேம்ப் பெல் பே என்ற பகுதியின் வடக்கு பகுதியில் இன்று மதியம் 1.15 மணியளவில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.9 ஆக பதிவானது. தொடர்ந்து, மதியம் 2.59 மணியளவில் நிகோபார் தீவு அருகே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.1 ஆக பதிவானது.
அதேபோல, நிகோபார் தீவு அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. தொடர்ந்து, 4-வது முறையாக நிகோபார் தீவில் கடலுக்கு அடியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது. வங்கக்கடலுக்கு அடியில் தொடர்ந்து 4 முறை நில நடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை தற்போதைக்கு இல்லை என்று புவியியல் மையம் தெரிவித்திருக்கிறது. எனினும், அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.