அம்மனுக்கு ரூ.8 கோடி நோட்டுக் கட்டுகளால்  அலங்காரம்: ஆந்திராவில் நவராத்திரி விசித்திரம்!

அம்மனுக்கு ரூ.8 கோடி நோட்டுக் கட்டுகளால் அலங்காரம்: ஆந்திராவில் நவராத்திரி விசித்திரம்!

Share it if you like it

ஆந்திராவில் நவராத்திரி பண்டிகையை ஒட்டி, அம்மனுக்கு 8 கோடி ரூபாய் நோட்டுக்கட்டுகளால் அலங்காரம் செய்திருந்தது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.

நவராத்திரி விழாவானது நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கொண்டாட்டங்களுடன் தனித்துவமாக கொண்டாடப்படும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி விழாவில், அம்மனுக்கு 9 நாட்களும் 9 விதமான அலங்காரங்களும், பூஜைகளும் செய்து விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். முதல் 3 நாட்கள் பார்வதி தேவிக்கும், இரண்டாவது 3 நாட்கள் லக்ஷ்மி தேவிக்கும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் ஒதுக்கப்படும். அந்த வகையில், நிகழாண்டு நவராத்திரி விழா செப்டம்பர் 26-ம் தொடங்கி தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அக்டோபர் 4-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.

இந்த நிலையில்தான், ஆந்திராவில் 8 கோடி ரூபாய் பணக்கட்டுகளால் அம்மனுக்கு சுவர் எழுப்பி விசித்திரமாகக் கொண்டாடி இருக்கிறார்கள். விசாகப்பட்டினம் மாவட்டம் மேற்கு கோதாவரி பகுதியில் வாசவி கன்யாகா கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயில் 135 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவின் அம்மன் அலங்காரத்தில் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பது வழக்கமாக இருந்து வருகிறது. இவ்விழாவில் சிறப்பம் என்னவென்றால், நவராத்திரி காலத்தில் அம்மனுக்கு ரூபாய் நோட்டில் அலங்காரம் செய்து வழிபடுவதுதான்.

அந்த வகையில், நிகழாண்டும் இக்கோயில் மூல விக்ரகமான அம்மன் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. 2,000, 500, 200, 100 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு, அம்மன் சிலையைச் சுற்றி சுவர்போல எழுப்பப்பட்டிருக்கிறது. இவ்வாறு மொத்தம் 8 கோடி ரூபாயில் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் அனைத்தும் பொதுமக்கள் நன்கொடையாக வழங்கியது. நவராத்திரி பூஜை முடிந்ததும் இப்பணத்தை உரியவர்களிடமே கோயில் நிர்வாகம் திருப்பித் தந்துவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it