ஆந்திராவில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தின்போது, கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையில் தீப்பற்றியதால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
நாடு முழுவதும் நேற்று ஸ்ரீராம நவமி விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில், ஆந்திர மாநிலத்திலும் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. அதன்படி, கோதாவரி மாவட்டம் தனுகு மண்டலத்திலுள்ள துவா கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோயிலிலும் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேசமயம், கோடை வெயிலின் உக்கிரம் அதிகம் இருந்ததால், பக்தர்களின் நலன் கருதி, நிழலுக்காக பனை ஓலைகளைக் கொண்டு கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.
பின்னர், வழக்கம்போல நேற்று காலை முதல் ஸ்ரீராம நவமிக்கான பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென மின்கசிவு காரணமாக நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த பனை ஓலைகளில் தீப்பிடித்தது. தீயை அணைக்க பக்தர்களும், கோயில் நிர்வாகிகளும் பெரும் முயற்சி செய்தனர். ஆனால், தீ மளமளவென பரவியதால், தீயை அணைக்க முடியவில்லை. இதனால், பக்தர்களும் நிர்வாகிகளும் கோயிலை விட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும், அதற்குள்ளாக கீற்றுக் கொட்டகை முழுவதும் எரிந்து விட்டது.
ராம நவமி தினத்தன்று நடந்த இச்சம்பவம், பக்தர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.