ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் செய்யும் தவறுகளை தமிழக பா.ஜ.க தலைவர் உடனுக்கு உடன் சுட்டிக்காட்டி வருகிறார். அந்த வகையில், பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனம் பற்றி அண்ணாமலை தெரிவித்த கருத்து ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியினை பிரபல வார பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
ஊழலற்ற நேர்மையான ஆட்சியினை தமிழக மக்களுக்கு வழங்குவோம், என்று தேர்தல் சமயத்தில் தமிழக மக்களுக்கு ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு பின்பு, தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுக்கள், ஆளும் கட்சி மீது குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தில், 246 கோடி 13லட்சம் ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கிறது. அந்த பணத்தை உடனடியாக மீட்டு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு. அதன் தொடர்ச்சியாக, ஸ்வீட் பாக்ஸ், மின்சாரம், போக்குவரத்து என நீள்கிறது இந்த பட்டியல்.
பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கத்தை முற்றிலும் குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மீண்டும் மஞ்சள் பை திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில், மிக பிரமாண்டமான முறையில் தொடங்கி வைத்தார். மேலும், ஜெர்மன் நாட்டு அமைப்புடன் இணைந்து “மஞ்சள் பை” பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் தி.மு.க. அரசு பெருமையோடு அறிவித்தது.
அந்த வகையில், தமிழக அரசு வழங்கிய ’மஞ்சள் பை’ திட்டத்தில், 130 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டை அண்மையில் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் அடங்குவதற்குள், 5 ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் பையை தமிழக அரசு 60 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று பொதுமக்களிடம் கேள்வி எழுப்பிய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். மேலும், மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டது, தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவனிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இப்படியாக, ஊழல் புகார்கள் நாளொரு மேனியும் பொழுதோரு வண்ணமுமாக தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தான், பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனம் குறித்து, அண்ணாமலை தெரிவித்த கருத்து முதல்வர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளதாக பிரபல வார பத்திரிக்கையான ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டு உள்ளது.