அண்ணாமலை புகார் எதிரொலி – சோதனையில் சிக்கிய G Square நிறுவனம்

அண்ணாமலை புகார் எதிரொலி – சோதனையில் சிக்கிய G Square நிறுவனம்

Share it if you like it

அண்ணாமலை புகார் எதிரொலி – சோதனையில் சிக்கிய ஜி ஸ்கொயர் நிறுவனம்

தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெங்களூரு மைசூரு மற்றும் பெல்லாரி உள்ளிட்ட நகரங்களில் உள்ள நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களிலும், நிறுவனத்தின் உரிமையாளர் பாலா எனப்படும் ராமஜெயத்தின் இல்லத்திலும் திங்கள்கிழமை காலை 7 மணியளவில் சோதனை தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் உறவினர் பிரவீன், சென்னை அண்ணாநகரில் உள்ள திமுக எம்எல்ஏ மோகன் மற்றும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான அவரது மகன் கார்த்திக் மற்றும் பாலா, அண்ணாநகரில் உள்ள ஆடிட்டர் சண்முகம் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த 2012ல் துவங்கப்பட்ட ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இதற்கு முன் கடந்த 2019ம் ஆண்டு வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் கீழ் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த அதிரடி சோதனைக்கு முக்கிய காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு. கடந்த ஏப்ரல் 14ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.

அதில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துடன் திமுகவின் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அதனால் அந்த நிறுவனம் அதிவேகமாக வளர்ந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் கட்டுமான திட்டங்களுக்கு மாநில வீட்டுவசதித் துறை வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஒப்புதல் அளித்து வருவதாகவும் குறிப்பாக கோயம்புத்தூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈகத்தூர் மற்றும் சென்னையில் உள்ள நீலாங்கரை ஆகிய மூன்று திட்டங்களுக்கு, குறுகிய காலத்திலேயே அனுமதி கிடைத்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்களை திமுக மறுத்த நிலையில் தற்போது ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வருமான வரித்துறையினரின் இந்த சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அண்ணாமலை தங்கள் நிறுவனம் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாஜக தலைவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. கடந்த 2012ல் துவங்கப்பட்ட எங்கள் நிறுவனம் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பிருந்தே கட்டுமான துறையில் வியாபாரம் செய்து வருகிறது. எங்கள் நிறுவனம் எந்தவிதமான ஊழல்களிலும் ஈடுபட்டதில்லை. எந்த குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலும் இல்லை.
பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில் ஜி ஸ்கொயர் உரிமையாளர்கள் திமுக குடும்பத்தினர் என்றும், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 38,827.70 கோடி என்றும், இது ஊழல் பணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த குற்றச்சாட்டுகளுக்கு முறையான விளக்கத்தை அளிக்க தயார் என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ‘‘ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது அவதூறு பரப்பும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுகளால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து முன் வைத்தால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என ஜி ஸ்கொயர் நிறுவனம் எச்சரித்துள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எதிர்ப்புகளும் வெற்று அறிக்கைகளும் மட்டுமே வெளியாகி வருகின்றன. உண்மையான தரவுகள் மற்றும் ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. ஊழல் நடைபெறவில்லை என்றால் அதை மக்கள் முன் நிரூபிக்கும் பொறுப்பு திமுகவினருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் உள்ளது. அதை செயலில் காட்டாமல் அறிக்கை விடுவதில் பிரயோஜனம் இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையா இல்லையா என்பது விரைவில் தெரியவரும்.


Share it if you like it