கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்.” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதி க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தனது பெற்றோருடன் வந்து வாக்கு செலுத்தினார்.
வாக்களித்த பின் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டும். எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்து உள்ளேன்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் எங்கு இருந்தாலும் இன்று மாலைக்குள் உங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களியுங்கள். அப்போது தான் நாட்டில் நல்ல ஆட்சி உருவாகும்.
தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கும்.
முழுமையாக நேர்மையான அறம் சார்ந்த வெளிப்படையான தேர்தலாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அறம் சார்ந்த வேள்வி எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
அப்போது, இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “நல்ல பாடம் என்றால் முதல்வர் சொன்னபடி பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.