கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செய்தியாளரிடம் அண்ணாமலை பேசியதாவது :-
தமிழகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை முதல் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். நாளைய தினம் டிடிவி தினகரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் அமித்ஷா செய்கிறார் எனத் தெரிவித்தார்.
தினம் ஒரு வார்த்தை, தினம் ஒரு தத்துவம் என்ற பாணியில் சீமான் அரசியல் நடத்துகிறார். சின்னம் கிடைக்காததால், தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். தன்னுடைய தவறை மறைப்பதற்காக தினமும் என்னையும், பாஜகவையும் சீமான் விமர்சிக்கிறார். அவர் செய்த தவறுக்காக தினமும் எங்கள் மீது பழிபோட்டால் எப்படி எனக் கேள்வி எழுப்பினார். மேலும் சீமான் சின்னத்திற்காக முறையாக விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின், அடிக்கடி தமிழகத்தை எட்டி பார்க்கிறார். கடந்த 3 வருடங்களில் ஸ்பெயின், சிங்கப்பூர், துபாய், ஜப்பான் சென்றார். இதனால், எந்த பயனும் இல்லை. முதல்வர் களத்திற்கு வராததால், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கொள்ளையடிப்பதையே முழுநேர பணியாக வைத்துள்ளனர். வீதிக்கு வந்தால் தான், மக்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது முதல்வருக்கு தெரியும்.
‛ ரோடு ஷோ’ வை முதல்வர் ஸ்டாலின் நடத்தட்டும். தமிழகத்தில் எந்த நகரையாவது முதல்வர் தேர்வு செய்து 10 கி.மீ., தூரம் ரோடு ஷோ நடத்தட்டும். எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை பார்ப்போம். நான் சவால் விடுகிறேன். ரோடு ஷோ நடத்த முதல்வருக்கு பயம் ஏன்.
பிரதமர் ரோடு ஷோ நடத்தி உள்ளார். அமித்ஷா நாளை தேனியில் ரோடு ஷோ நடத்துகிறார். முக்கிய நகரில் பிரதமர் மீண்டும் ரோடு ஷோ நடத்த உள்ளார். அதனை ஏன் முதல்வர் செய்யவில்லை. மாய உலகத்திற்குள் அவர் கட்டிய கோட்டைக்குள் அமர்ந்து கொண்டு பிரதமரை அவர் விமர்சிக்கிறார். பிரதமர் உழைப்பை பாருங்கள். முதல்வர் உழைப்பை பாருங்கள் மக்களே முடிவு செய்யட்டும், யார் மக்களுக்காக உழைப்பது யார் என தெரியும். இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்க சவால் விடுத்துள்ளார்.