ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

Share it if you like it

#BGR_ஊழல்_திமுக என்கிற ஹேஷ்டேக்தான் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அப்படி என்ன BGR ஊழல் என்பதை தெரிந்துகொள்ள களத்தில் இறங்கினோம்.

விஷயம் இதுதான்… தமிழக பா.ஜ.க. தலைவரான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடவதாக குற்றம்சாட்டி வந்தார். குறிப்பாக, பி.ஜி.ஆர். என்கிற தகுதியில்லாத பவர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருப்பதில் ஊழல் நடந்திருப்பதாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார். அதாவது, 355 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்துக்கு, சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிக்காக முறைகேடாக 4,472 கோடி ரூபாய்க்கு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டினார். மேலும், இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றும், மேற்கண்ட ஊழலை பா.ஜ.க. வெளிக்கொண்டு வரும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் மிரண்டுபோன டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இது 2019-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது போடப்பட்ட ஒப்பந்தம் என்று முதலில் கூறி சமாளித்தவர், பின்னர், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அண்ணாமலை இந்த குற்றச்சாட்டை சொன்னார் என்பதை 24 மணி நேரத்துக்குள் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் தொணியில் சவால் விட்டார். இதுதான் அண்ணாமலையை ஆத்திரமடையச் செய்துவிட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும், மீண்டும வெளியே வந்து உங்களது ஊழல்களை அம்பலப்படுத்துவேன் என்று ஆவேசமாகக் கூறியவர், நீங்கள் மட்டும் ஆட்சியில் இல்லை. நாங்களும் ஆட்சியில்தான் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள் என்று ஒரே போடாகப் போட்டார்.

இதன் பிறகு, செந்தில் பாலாஜி கப்சிப். ஆனாலும், அண்ணாமலை விடுவதாக இல்லை. பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்தைப் பற்றி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு கிழிகிழி என கிழித்து தொங்கவிட்டு விட்டார். அதில், இதே பி.ஜி.ஆர். நிறுவனம் ஏற்கெனவே நடந்த தி.மு.க. ஆட்சியில், மேட்டூர் அனல் மின் நிலைய பணிகளை எடுத்தது. 2008 – 11 காலக்கட்டத்துக்குள் முடிக்க வேண்டிய இப்பணியை 2 வருடம் தாமதமாக 2013-ல்தான் முடித்துக் கொடுத்தது. இற்காக அரசுக்கு கட்ட வேண்டிய அபராதத்தை கட்டவில்லை. அரசும் அபராதம் விதிக்கவில்லை. மேலும், 2019-ல் கிடைத்த ஆர்டருக்கு 2021 வரை 10 சதவிகிதம் பிணைத்தொகையை கட்டமுடியாமல் இருந்தது. இதனால், அந்த டெண்டரை மின்சார வாரியம் ரத்து செய்தது. இதுபோன்ற இழப்புகளை ஏற்படுத்தும் நிறுவனங்களை அரசானது கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும். ஆனால், கோபாலபுரத்தின் செல்வாக்கினால் அந்த நிறுவனத்துக்கு 4,472 கோடி ரூபாய்க்கான ஆர்டர் மார்ச் 10-ம் தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த நிறுவனத்தில் பங்குகள் 120 மடங்கு அதிகரித்திருக்கிறது என்று விலாவாரியாக பின்னி பெடலெடுத்து விட்டார்.

மேலும், இந்த ஊழல் தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து இன்று காலை புகாரும் கொடுத்திருக்கிறார். இதை வைத்துத்தான் #BGR_ஊழல்_திமுக என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர் தமிழக பா.ஜ.க.வினர். இந்த பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கு டெண்டர்கள் கொடுக்கப்பட்ட 2006 – 11 தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் தமிழகம் மிகப்பெரிய அளவிலான மின்வெட்டை சந்தித்தது என்பது கூடுதல் தகவல். அப்படி இருக்க, தற்போது மீண்டும் அதே பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டிருப்பதால் தமிழகம் மீண்டும் மின்வெட்டை சந்திக்கும் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.


Share it if you like it