அன்னபூரணி விவகாரம் : பகிரங்கமாக வருத்தம் தெரிவித்த நயன்தாரா !

அன்னபூரணி விவகாரம் : பகிரங்கமாக வருத்தம் தெரிவித்த நயன்தாரா !

Share it if you like it

கோலிவுட்டில் நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. ஒரு பக்கம் திரைப்படங்களில் நடிக்கும் பட்சத்தில், மற்றொரு பக்கம் பல தொழில்களில் அவரும், அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் முதலீடு செய்து வருகின்றனர். அதன்படி நயன்தாரா நடித்துள்ள படம் அன்னபூரணி.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது. அறிமுக இயக்குநர் நீலேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளன. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். நயன்தாரா, ஜெய், சத்யராஜ் இவர்களின் கூட்டணி ராஜா ராணி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. மேலும் அன்னபூரணி திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

இத்திரைப்படம் கடந்த மாதம் 1-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ஓடிடி தளமான நெட்பிளிக்ஸிலும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலாங்கி என்பவர், இந்தப்படம் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும், லவ்ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் குற்றம்சாட்டி மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்று சமூக வலைத்தளமான X ல் #BoycottNetflix என்கிற ஹாஷ்டாக் டிரெண்டாகி வந்தது. மேலும் ஹிந்துக்களின் தரப்பிலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நெட்பிளிக்ஸ்லிருந்து அன்னபூரணி படம் நீக்கப்பட்டது. இந்நிலையில் இது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

ஜெய் ஸ்ரீராம்

எனது நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

‘அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே ‘அன்னபூரணி’ திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை.

கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல.

எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண் மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


Share it if you like it