விருது வழங்கும் நிகழ்ச்சியில் மேடையில் பேச வந்த தனது மனைவி சாய்ரா பானுவிடம், ஹிந்தியில் வேண்டாம் தமிழில் பேசு என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் ஆனந்த விகடன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்துகொண்டார். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களால் இருவரும் மேடைக்கு அழைக்கப்பட்ட நிலையில், மைக்கை பிடித்த ஏ.ஆர். ரஹ்மான், “எனது பேட்டிகளை நான் மீண்டும் மீண்டும் பார்க்க மாட்டேன். ஆனால், எனது குரல் மிகவும் பிடிக்கும் என்பதால் எனது மனைவி அடிக்கடி பார்ப்பார்” என்றார். இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது பற்றி, அவரது மனைவி சாய்ரா பானுவின் கருத்தை தெரிவிக்குமாறு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, சாய்ரா பானு பேச முற்பட்டபோது, ஹிந்தியில் வேண்டாம், தமிழில் பேசு என்று அவரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார். இதையடுத்து, ஆங்கிலத்தில் பேசிய சாய்ரா பானு, “தமிழில் சரளமாக பேச வராது என்பதால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவரது குரல் எனக்கு பிடித்தமானதாக இருப்பதால் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் கேட்பேன். அவரது குரல் மீது எனக்கு தனி பிரியம் உண்டு. இதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்” என்று சொல்லி முடித்து கொண்டார். இந்த விவகாரம்தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, தனது மனைவிக்கு தமிழ் சரளமாக பேச வராது என்பது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். எனினும், தனது ஹிந்தி வெறுப்பைக் காட்டுவதற்காக தனது மனைவியிடம் ஹிந்தியில் பேச வேண்டாம் என்று வேண்டுமென்றே சொன்னாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அதேசமயம், வெளியுலகில் தனக்கு தமிழ் மீது பற்று இருப்பதுபோல காட்டிக் கொள்ளும் ஏ.ஆர்.ரஹ்மான், தனது வீட்டுக்குள் அவரது தாய் மொழியான உருது மொழியில்தான் பேசிக்கொள்கிறார் என்பதும் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.