கலைமகளின் தலைமகன்
நம் பாரத நாட்டின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் எண்ணற்ற பெரியோர்கள் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து அருந்தொண்டு புரிந்துள்ளனர். அப்படிப்பட்ட பெரியோர்களில் ஒருவர் தான் ஸ்ரீ அரவிந்தர். அறிஞர், ஆசான், ஞானி, யோகி போன்ற பன்முகங்களை கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். சுதந்திரப் போராட்டத்தில் ஸ்ரீ அரவிந்தரின் பங்கு அளப்பரியது.
கல்கத்தாவில் டாக்டர் கிருஷ்ண தன கோஷ் மற்றும் ஸ்வர்ணலதா தேவி தம்பதியினருக்கு 1872ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மூன்றாவது மகனாக பிறந்தார் ஆரோபிந்தோ அக்ராய் கோஷ் எனும் அரவிந்தர். டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டோ கான்வென்டில் தன் பள்ளிப் படிப்பை துவங்கிய அரவிந்தர் 1884ம் ஆண்டு தனது 12வது வயதில் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். பள்ளிப் படிப்பை தொடர்ந்து பின் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சிவில் சர்வீஸ் படிப்பை தொடர்ந்தார். உலக வரலாறுகளை படித்து தேர்ந்த அரவிந்தர் பாரதத்தின் நிலைமை குறித்தும் ஆழமாக அறிந்தார். அன்னை திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடவும் உறுதி பூண்டார். சிவில் சர்வீஸ் தேர்வை எழுதாமல் கைவிட்டார். இந்நிலையில் அலுவல் காரணமாக லண்டன் வந்திருந்த பரோடா சமஸ்தான மன்னர் சாயாஜிராவ் கையக்வார்டை அரவிந்தர் சந்தித்தார். அரவிந்தரின் அறிவுத்திறனைக் கண்ட மன்னர் தன் சமஸ்தானத்தில் உயர் பொறுப்புகளை ஏற்க வலியுறுத்தினார். முதலில் தயங்கிய அரவிந்தர் மன்னரின் தொடர் வலியுறுத்தலால் ஒப்புக் கொண்டார். இதன் காரணமாக 1893ம் ஆண்டு மீண்டும் தன் தாய் திரு நாட்டின் மீது தன் பாதங்களைப் பதித்தார்.
பரோடாவில் தங்கி தன் பணிகளை தொடர்ந்த அரவிந்தர் வங்காளம் மற்றும் சமஸ்கிருத மொழிகளைப் பயின்றார். 1897ல் பரோடா கல்லூரியில் பேராசிரியராகவும் பின்னர் அதே கல்லூரியின் துணை முதல்வராகவும் பணியாற்றினார். அவர் பரோடாவில் இருந்த காலகட்டத்தில் லோகமான்ய திலகர் மற்றும் சகோதரி நிவேதிதா ஆகியோருடன் நட்பும் தொடர்பும் ஏற்பட்டது. 1901ம் ஆண்டு கல்கத்தாவில் மிருணாளினி தேவியை திருமணம் செய்து கொண்டார் அரவிந்தர். ஆனால் 1918ம் ஆண்டு மிருணாளினி தேவி நோய்வாய்ப்பட்டு காலமானார். இதனால் அரவிந்தரின் 17 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதனிடையே அரவிந்தர் 1906ல் கல்கத்தாவின் புகழ்ப்பெற்ற தேசிய கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இதே காலகட்டத்தில் வங்காளப் போராளி பிபின் சந்திர பால் துவக்கிய ‘Bande Mataram’ எனும் வாரப் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் ‘Indu Prakash’ எனும் பத்திரிக்கையில் ‘New Lamps for Old’ எனும் தலைப்பில் அவர் எழுதிய புரட்சிக் கட்டுரை வாசகர்களிடையே சுதந்திர போராட்டக் கனலை தூண்டி விட்டது. இதன் மூலம் அரவிந்தரின் பெயர் மிகவும் பிரபலமானது.
பின்னர் ‘Bhavani Mandir’ எனும் புரட்சி நூலை படைத்தார் அரவிந்தர். ரகசியமாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட அந்நூல் சுதந்திரப் போராட்டத்தில் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி கையேடாக அமைந்தது. எழுத்துக்கள் மட்டுமன்றி அரவிந்தரின் பேச்சும் சுதந்திர வேட்கையை மக்களிடையே விதைத்தது. அவரின் பேச்சையும் சொற்பொழிவுகளையும் கேட்க ஏராளமான மக்கள் கூடத் துவங்கினர். தனது உரைகளில் குறிப்பாக கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் உருவான மத ரீதியான வங்காளப் பிரிவினையை அரவிந்தர் தீவிரமாக எதிர்த்தார்.
இந்நிலையில் ஆங்கில அரசு தன் சந்தேகப் பார்வையை அரவிந்தர் பக்கம் திருப்பியது. இவரை மேலும் வளர விட்டால் தங்களின் அடித்தளத்தையே அசைத்து விடுவார் என அஞ்சியது. அரவிந்தரை பொய்யாக புனையப்பட்ட அலிப்பூர் குண்டு வழக்கில் ஆங்கில அரசு 1908ம் ஆண்டு கைது செய்து அலிப்பூர் தனிமை சிறையில் அடைத்தது. அரவிந்தர் தான் இருந்த சிறைவாசத்தை பல நூல்களை வாசிக்கவும், தனது ஆன்மிக சாதனைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டார். தன்னை ஒரு சக்தி உள்ளிருந்து இயங்குவதையும் தனக்கு வழிகாட்டுவதையும் தன்னை அரவணைப்பதையும் உணர்ந்தார். அந்த சக்தியினால் உந்தப்பெற்று பெரும்பாலான நேரங்களை யோகத்திலும் தியானத்திலும் ஈடுபடுத்திக் கொண்டார். தான் தியானத்தில் ஈடுபட்டிருந்த தருணங்களில் சுவாமி விவேகானந்தர் தன்னோடு தொடர்பு கொண்டதாகவும் அரவிந்தர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை முழுவதும் அந்த ஆன்மீக சக்தி ஆட்கொள்வதை உணர்ந்தார் அரவிந்தர். சுமார் ஒரு வருடம் நடந்த வழக்கு விசாரணையில் சித்தரஞ்சன் தாஸின் சிறந்த வாதத் திறமை மூலம் 1909ம் ஆண்டு அரவிந்தர் விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்தர் ‘Karmayogi’ எனும் வார இதழை தொடங்கி அதில் ‘To my Countrymen’ எனும் தலைப்பில் கட்டுரைகள் எழுதினார். இந்நிலையில் அரசியலைக் குறைத்து ஆன்மீகத்தை பெருக்கி அரவிந்தரின் ஞானத்தேடல் துவங்கியது. தனது தேடலின் ஒரு அங்கமாக 1910ம் ஆண்டு சந்தன்நகர் எனும் இடத்தை அடைந்தார்.
சுமார் 3 மாதங்கள் அங்கே கழித்த அரவிந்தருக்கு பாண்டிச்சேரிக்கு செல்ல அவரின் உள்ளிருந்த ஒலித்த ஆன்மீக குரல் பணித்தது. அக்குரலின் வழிகாட்டுதலால் வேதபுரி என அழைக்கப்படும் பாண்டிச்சேரியை வந்தடைந்தார் அரவிந்தர். பாண்டிச்சேரி பிரெஞ்சு அரசின் ஆளுகையில் இருந்ததால் ஆங்கில அரசு அரவிந்தருக்கு எதிரான தன் நடவடிக்கைகளை நிறுத்தியது. பாண்டிச்சேரியில் தான் இருந்த காலத்தை அரவிந்தர் ஆன்மீகத்தில் முழு ஈடுபாட்டை செலுத்தினார். 4 ஆண்டு காலத்திற்கு பின்னர் 1914ம் ஆண்டு ‘Arya’ எனும் தத்துவ விசார இதழை வெளியிட்டார். 1921ம் ஆண்டு அந்த இதழ் நிறுத்தப்பட்டு புத்தக வடிவில் வெளிவந்தது.
இது தவிர அரவிந்தர், யோகம் சம்பந்தப்பட்ட ஆய்வுகள், பகவத்கீதை பற்றிய கட்டுரைகள், வேத சூத்திரங்கள் மற்றும் உபநிஷதுக்கள் பற்றிய பல நூல்களை எழுதினார். பாண்டிச்சேரியில் அரவிந்தரை தேசியகவி சுப்ரமணிய பாரதி சந்தித்தார். பாரதிக்கு அரவிந்தர் ரிக் வேத உபதேசம் செய்வித்தார். இதே போல் வ.வே.சு. ஐயர் அரவிந்தருடன் தங்கி யோகம் பயின்றார். பின்னர் காந்தியடிகளின் வேண்டுகோளுக்கிணங்க, காங்கிரஸில் சேர்ந்து பணியாற்ற, தன்னை சந்தித்த லாலா லஜபதி ராய் மற்றும் தேவதாஸ் காந்தி ஆகியோரிடம் தான் முழுவதும் ஆன்மீகத்தில் இறங்கி விட்டதாகவும், இறைவன் அருளால் குறித்த காலத்தில் பாரத அன்னை ஆங்கில அரசிடமிருந்து சுதந்திரம் பெறுவாள் எனவும் குறிப்பிட்டார் அரவிந்தர்.
இந்நிலையில் மிர்ரா அல்ஃபஸா (Mirra Alfassa) என்ற பிரெஞ்சு பெண்மணி அரவிந்தரை பாண்டிச்சேரிக்கு வந்து சந்தித்தார். அரவிந்தரை தன் ஆன்மீக குருவாக ஏற்று கொண்ட மிர்ரா, அவருடன் தங்கி ஆன்மீக பயற்சி மற்றும் பணிகளை தொடர்ந்தார். காலப்போக்கில் மிர்ரா ஸ்ரீ அன்னை என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டார்
அரவிந்தரின் புகழ் பரவி அவரை தரிசிக்க பல உள்நாட்டவரும் வெளிநாட்டவரும் பாண்டிச்சேரிக்கு மலரை தேடி வரும் வண்டுகள் போல வந்து சேர தொடங்கினர். தன்னை நாடி வந்தோருக்கு ஏற்பட்ட ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைத்த அரவிந்தர், பின்னர் நாளடைவில் ஸ்ரீ அன்னையிடம் தன் பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மௌனத்தில் ஆழ்ந்தார்.
அரவிந்தரின் குறிப்பின்படியே அவரின் பிறந்த நாளான ஆகஸ்டு 15ம் தேதியிலேயே 1947ம் ஆண்டு பாரதம் சுதந்திரம் பெற்றது. இதன் பிறகு தனது 78ம் வயதில் 1950ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அரவிந்தர் மகா சமாதி அடைந்தார். ஒரு சுதந்திர போராட்ட வீரராக, பேராசிரியராக, எழுத்தாளராக, யோகியாக அரவிந்தர் இந்த மனித குலத்திற்கு வழங்கிய கொடைகள் ஏராளம்.
கலைமகளுக்கும் பாரதி என்ற ஒரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட பாரதியாகிய கலைமகளின் தலைமகன் தான் ஸ்ரீ அரவிந்தர்.
ஜெய் ஹிந்த்!!
- ஸ்ரீகுமார் கண்ணன்